(Source: ECI/ABP News/ABP Majha)
Uber Driver Harassment : பெண் பத்திரிகையாளருக்கு உபெர் ஓட்டுநர் செய்த பாலியல் கொடூரம்.. மகளிர் ஆணையம் நடவடிக்கை
உபேர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது வீட்டிலிருந்து தனது நண்பரின் வீட்டிற்குச் செல்லும்போது, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் பிரபல பன்னாட்டு ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் பத்திரிகையாளர், தான் பயணித்த உபேர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது வீட்டிலிருந்து தனது நண்பரின் வீட்டிற்குச் செல்லும் போது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்வீட்டில் டெல்லி மகளிர் ஆணையம் புகாரைப் பெற்றதை உறுதிப்படுத்தி உள்ளது மற்றும் இதுகுறித்து உபேர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
தனது ட்வீட் மூலம் அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை டெல்லி ஆணையத்திற்கு விவரித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த புதன்கிழமையன்று தனது நண்பரைப் பார்க்க டெல்லி நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் உள்ள தனது இல்லத்திலிருந்து மாளவியா நகருக்கு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறியபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்
“நான் என் வீட்டிலிருந்து எனது நண்பரின் இடத்திற்கு ஆட்டோவில் சென்றேன். சிறிது நேரம் கழித்து, ஆட்டோவின் பக்கவாட்டு கண்ணாடி வழியாக, துல்லியமாக என் மார்பகங்களை டிரைவர் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். நான் சிறிது வலது பக்கம் நகர்ந்தேன், இடது பக்க கண்ணாடியில் நான் தெரியவில்லை. பின்னர் அவர் கண்ணாடியின் வலது பக்கத்தைப் பார்க்கத் தொடங்கினார். நான் உடனே இடது பக்கம் மாறினேன், எந்த கண்ணாடியிலும் தெரியவில்லை. பிறகு என் பக்கம் திரும்பி மீண்டும் மீண்டும் பார்க்க ஆரம்பித்தார். நான் முதலில் உபரின் பாதுகாப்பு அம்சத்தைப் பயன்படுத்த முயற்சித்தேன், ஆனால் பயனில்லை” என்று அவர் ட்வீட்டில் கூறியுள்ளார்.
முதல் முறையாக அந்த எண்ணை டயல் செய்தபோது, ஆடியோ தெளிவாக இல்லை என்றும், உடனே அந்த ட்ரைவரை எதிர்கொண்டு தான் புகார் அளிக்க உள்ளதாகச் சொன்னதும் தாராளமாகத் தரும்படி கூறியதாகவும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
"பின்னர் நான் அந்த எண்ணுக்கு மீண்டும் டயல் செய்தேன், ஆனால் மோசமான நெட்வொர்க் காரணமாக ஆடியோவைக் கேட்க முடியவில்லை," என்று அவர் குற்றம் சாட்டினார். அது குறுகிய பயணமாக இருந்ததால் சவாரியை ரத்து செய்யவும் முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
பின்னர் பல மணிநேரங்களுக்குப் பிறகு உபேர் கேர் என்னைத் தொடர்புகொண்ட பின்பு, தனது புகாரை அளித்ததாக அவர் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு முறையான புகார் எதுவும் இதுவரை வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், மார்ச் 6-ஆம் தேதிக்குள் அப்டேட் செய்யுமாறு மகளிர் ஆணையம் கோரியது.
உபெர் நிறுவனத்துக்கு அளித்த நோட்டீஸில், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை குழு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது