(Source: ECI/ABP News/ABP Majha)
அபராதம் விதித்த போலீசாருக்கு மிரட்டல்; இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகி மீது கொலை மிரட்டல் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு விதிகள் அமலில் இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு ஊரடங்கு மூன்று வகைகளாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக போலீசாரும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் இந்து முன்னணி கட்சியில் தற்போது நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஊரடங்கு விதிகள் அமலில் இருப்பதால் அவரை போலீசார் நிறுத்தி, விசாரித்துள்ளனர். மேலும், தேவையின்றி வெளியில் சுற்றிய காரணத்தினால் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதித்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த செல்லப்பாண்டியன் காவல் ஆய்வாளர் மற்றும் அங்கிருந்த போலீசாரிடம் சென்று தான் யார் என்று தெரியுமா? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், எங்கள் ஏரியாவிற்குள் நான் வரக்கூடாதா? பார்த்துக்கொள்ளலாமா? எனக்கே அபராதாமா? என கடுமையாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, செல்லப்பாண்டியனிடம் அபராதம் விதித்த தலைமை காவலரிடம் சென்று, தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதையடுத்து, செல்லப்பாண்டியன் மீது சிறப்பு உதவி ஆய்வாளர் வில்லியம் ஜேம்ஸ் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு விதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் இதுபோன்ற நபர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்ணுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை, சொகுசு காரில் வந்த அந்த பெண்ணின் தாயார் தான் வழக்கறிஞர் என்றும், உங்கள் அனைவரையும் வேலையை விட்டுத் தூக்கிவிடுவேன் என்றும் பேசியதுடன் மிகவும் தகாத வார்த்தைகளால் போலீசாரை திட்டினார்.
இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அந்த பெண் வழக்கறிஞர் தனக்கும், தனது மகளுக்கும் கோரிய முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.