Crime: தென்காசியில் சித்த மருத்துவர் வீட்டில் 102 சவரன் கொள்ளை; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தருமபுரியில் கைது
ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா, மகன் மூவரும் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகர் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் ( 38). இவர் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 19- ந்தேதி தனது குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் இரவில் உள்ளே சென்று அங்குள்ள பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து மணிவண்ணன் வாசுதேவ நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 102 சவரன் தங்க நகைகள், 263 கிராம் வெள்ளி காணாமல் போனது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சூழலில் சம்பவம் நடந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கிடமாக 4 பேர் கொள்ளை நடந்த அன்று காலையில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வாசுதேவநல்லூர் அருகே தலையணை பகுதியில் வசிக்கும் ஒருவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் அவரது உறவினர்களான தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா மலைதாங்கி கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்ற நிக்கல்சன்(50), அவரது மனைவி லலிதா(45), அவர்களது மகன் நவீன்குமார்(27) ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தருமபுரிக்கு சென்று 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்களின் உறவினர்கள் வாசுதேவநல்லூர் தலையணையில் வசித்து வருவதால் அங்கு வந்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு ஆட்கள் இல்லாததை அறிந்துள்ளனர். சம்பவத்தன்று மணிவண்ணன் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக அதே தெருவில் 3 வீடுகளின் கதவை உடைத்து பணம் திருடியுள்ளனர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா, மகன் மூவரும் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்