Crime : திருவண்ணாமலை ஏடிஎம்களில் கைவரிசை.. கொள்ளையர்கள் யார்? ஆந்திராவிற்கு விரைந்தது தனிப்படை..!
திருவண்ணாமலையில் உள்ள பல ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க ஆந்திராவிற்கு தனிப்படை விரைந்துள்ளது.
பல ஏடிஎம்களில் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டம் மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் நேற்று இரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். மேலும் கேஸ் வெல்டிங் பயன்படுத்தியதால் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்து ஏடிஎம் மையத்திற்கு வந்த திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் மர்மநபர்கள் புகுந்து மிஷினில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
ரூ.56 லட்சம் கொள்ளை
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.56 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையத்தில் நேரங்களில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து லட்சக்கணக்கான ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா விரைந்தது தனிப்படை
இந்நிலையில், ஆந்திரா மும்பை ஒடிசா போன்ற வெளிமாநிலங்களை தொடர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை கையாளக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய வடநாட்டு கொள்ளை கும்பல் இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட மாடல் ஏடிஎம் எந்திரத்தை மற்றும் ஏடிஎம் அலாரங்களை செயல் இழக்க செய்துவிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்ய எஸ்பி தலைமையிலான தனிப்படை ஆந்திரா மாநிலம் விரைந்துள்ளது. திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன், திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன், வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.