Crime: ஒரு சதவீத வட்டியில் கடன்; பண மோசடியில் டெல்லியை சேர்ந்த பெண் கைது
ஒரு சதவீத வட்டியில் கடன் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த பெண் உள்பட 5 பேரை புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பால்ராஜின் மகன் கனிக்குமார். மீனவர். இவரது செல்போன் எண்ணிற்கு, ஒரு சதவீத வட்டியில் தனிநபர் கடன் தருவதாக ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த செல்போன் எண்ணை கனிக்குமார் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் கடன் கேட்டிருக்கிறார். அவரிடம் மறுமுனையில் பேசிய நபர் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் என்று கூறி கனிக்குமாரின் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றை வாட்ஸ்-அப் மூலம் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடன் தொகையை வழங்குவதற்காக வரைவோலை எடுக்க கட்டணம் உள்பட பல்வேறு கட்டணம் என ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 100 வரை வங்கி மூலம் அவர்கள் கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு கனிக்குமார் பல்வேறு தவணைகளாக அனுப்பியிருக்கிறார். ஆனால் கடன் தொகையை வழங்காமல் அவர்கள் இருந்துள்ளனர். இது தொடர்பாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் கனிக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கனிக்குமாரிடம் பேசிய செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்கு எண்கள் ஆகியவற்றை வைத்து போலீசார் விசாரித்தனர். மேலும் தொழில்நுட்ப ரீதியாக போலீசார் விசாரித்தனர். இதில் மோசடியில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் புதுடெல்லியை சேர்ந்த ரகுபதி (வயது 30), முகமது எஸ்தாக் (24), முகமது சாபி ஆலம் (43), பாலாஜி (25), பிரியா (36) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினி, 22 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், ஏ.டி.எம். கார்டு, கணக்குகள் பதிவு செய்யப்பட்ட நோட்டுகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்கிருந்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டெல்லி சென்று மோசடி கும்பலை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட போலீசாரை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மோசடி கும்பலை சேர்ந்த 5 பேர் சிக்கியது எப்படி என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், "மர்மநபர்கள் பேசிய செல்போன் எண்கள், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு எண்கள் ஆகியவற்றை வைத்து விசாரித்ததில் டெல்லியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஆனால் அவர்கள் போலியான ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியிருக்கின்றனர். செல்போனில் ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அவர்களின் இருப்பிடம் மற்றும் முழுவிவரத்தை கண்டுபிடித்தோம். முன்கூட்டியே இந்த தகவல்களை திரட்டி வைத்து டெல்லிக்கு நேரடியாக சென்று 2 நாளில் 5 பேரை கைது செய்து அழைத்து வந்தோம்" என்றனர். மேலும், ஆன்லைன் மோசடி, கடன் வாங்கி தருவதாக மோசடி உள்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் மோசடி கும்பலை சேர்ந்த 5 பேரை டெல்லி சென்று போலீசார் கைது செய்தது இதுவே முதல் முறையாகும்.