Crime : கோவையில் பரபரப்பு... நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை
நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக ஏராளமானோர் தினமும் வந்து செல்வது வழக்கம். நீதிமன்றத்திற்கு அருகே உள்ள கோபாலபுரம் 2-வது வீதியில் வழக்கறிஞர்கள் அலுவலகங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தின் பின்புற வாயில் இப்பகுதியில் அமைந்திருப்பதால், இந்த வழியாக நீதிமன்றத்திற்குள் பலர் சென்று வருவதுண்டு. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக வாய்தாவுக்கு வந்த 2 பேர் டீ குடிப்பதற்காக கோபாலபுரம் 2-வது வீதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டீ கடையில் இருந்த வாலிபரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் கழுத்தில் வெட்டப்பட்ட ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மற்றொரு வாலிபருக்கும் தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மற்றொரு வாலிபர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான நபர் கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயம் அடைந்தவர் சிவானந்தா காலனியை சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் கொலையான தற்காப்பிற்காக இடுப்பில் கத்தி வைத்திருந்ததும், முன் விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதனிடையே கொலை தொடர்பான ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், காயமடைந்த மனோஜை கொலையாளிகள் கத்தி வெட்டுவதும், அதில் நிலை தடுமாறி அவர் கீழே விழும் காட்சிகளும், இதனைத் தொடர்ந்து 4 பேரும் நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நேற்றிரவு சத்திய பாண்டி என்ற நபரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த நிலையில், மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்