“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
”ரவுடிகளை உச்சபட்ச நடுக்கத்தில் வைத்திருந்தது சென்னையில் அடுத்து அடுத்து நடந்த மூன்று என்கவுண்டர் சம்பவங்கள்”
48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 3 இடங்களில் கத்தி குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..
காவல் ஆணையரிடம் அறிக்கை கேட்டாரா முதல்வர் ?
இந்நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ள நிலையில், என்ன நடக்கிறது அருண் IPS? இந்த சம்பவங்களுக்கான காரணம் என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை தொடர்ந்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார் அருண் IPS. முதல் செய்தியாளர் சந்திப்பில் அருண் ஐபிஎஸ் சொன்ன முதல் வார்த்தை ”ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது தான்.
சென்னை போலீஸ் கமிஷனராக அருண் IPS பதவியேற்றதன் தொடர்சியாக, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் முடுக்கி விடப்பட்டன. சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்வது, கண்காணிப்பது, வெளியே இருக்கும் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று இரவு ரவுண்ட்ஸில் காவல்துறையினர் ஈடுபடுவது, அவர்களின் குடும்பத்தாருக்கு அறிவுரை வழங்குவது என அடுத்தடுத்த அதிரடிகள் பாய்ந்தது..
தொடர்ந்த என்கவுண்டர் ; அடங்கிய ரவுடிகள்
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ரவுடிகளை உச்சபட்ச நடுக்கத்தில் வைத்திருந்தது சென்னையில் அடுத்து அடுத்து நடந்த மூன்று என்கவுண்டர் சம்பவங்கள். ரவுடி திருவேங்கடம் , காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா என மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொல்லபட்டனர். இதனால் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் ரவுடிகள் அடங்கத் தொடங்கினர்.
இப்படி ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு பின் படிபடியாக சட்டம் ஒழுங்கு சென்னையில் சீராக இருப்பதாக இமேஜும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உருவாகி வந்த நிலையில் தான், சென்னையில் கடந்த 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த கத்தி குத்து சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
48 மணி நேரத்தில் மூன்று சம்பவங்கள்
சம்பவம் 1 : கடந்த நவம்பர் 10ம் தேதி இரவு சென்னை திருவிக நகரில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனசேகர் என்ற நபரை, 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
சம்பவம் 2 : அதே போன்று நேற்று மாலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த மார்கெட் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் 3 : மேலும் இன்று காலை சென்னை கிண்டி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த 3 சம்பவங்களிலுமே குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யபட்டுள்ள நிலையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கத்தி குத்து சம்பவங்கள் நடந்துள்ளதாக காவல் துறை தரப்பில் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் சென்னையில் அடுத்தடுத்த நடந்த இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது அனைத்துமே தனிப்பட்ட விரோதங்களால் நடந்த சம்பவங்கள் என்று சொல்லபட்டாலும், தமிழக்கத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன.