சென்னையில் அதிர்ச்சி.. லிப்ட்டில் தனியாக சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் பெண்ணுக்கு லிப்டில் மர்ம நபர் பாலியல் தொல்லை

தனியார் அடுக்குமாடி கட்டிடம்
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே.ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.
லிப்ட்டில் பாலியல் அத்துமீறல்
வழக்கம் போல் பணிக்கு வந்து நான்காவது பிளாக் கட்டடத்தில் உள்ள லிப்டில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது லிப்டில் உடன் பயணித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டு லிப்டை நிறுத்தினார்.
இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூச்சலைக் கண்டு சக பெண் பணியாளர்கள் அந்த நபரை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் நல சங்கத்திடம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சக பணிப் பெண்கள் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்காததால் வானகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலியல் அத்துமீறல் தொடர்பாகவும் லிப்டில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து பிரச்சனையால் அண்ணனை பழிவாங்க தம்பிகள் செய்த செயல்
சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 54 ) இவர் மேற்கண்ட முகவரியில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
இவரது உடன் பிறந்த தம்பி , தங்கைகள் தரை தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நீண்ட நாட்களாகவே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக இரு வீட்டாரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வாக்கு வாதத்தால் அடிதடி
பிரபாகரன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை வெளியே அழைத்துக் கொண்டு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலில் நின்றிருந்த பிரபாகரனின் தம்பி ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் பிரபாகரனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக அடித்துள்ளனர்.
மேலும் , ஜெயக்குமார் வளர்க்கும் நாயை விட்டு கடிக்க வைத்தாக கூறப்படுகிறது. இதில் பிரபாகரனின் அடி வயிற்றில் நாய் கடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு அவரது மனைவி மற்றும் மகள்களுடன் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பிரபாகரன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செம்பியம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் காயம் பட்ட பிரபாகரனின் தம்பிகளான ஜெயக்குமார் ( வயது 52 ) மற்றும் பெரியார் செல்வன் ( வயது 48 ) ஆகிய இருவரும் தனது அண்ணன் கிருபாகரனை சரமாரியாக தாக்கி நாயை விட்டு கடிக்க வைத்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஜெயக்குமார் மற்றும் பெரியார் செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்த செம்பியம் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















