Crime : ஆண்நண்பருடன் இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிய மனைவி..! அடித்தே கொன்ற கணவன்..!
செல்போனில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் பேசிய மனைவியை அடித்தே கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்து அமைந்துள்ளது கண்ணகிநகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் புகழ்கொடி. 29 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருடைய மனைவி சரிதா. இவருக்கு வயது 21. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி இரவு சரிதாவை தலையில் பலத்த காயத்துடன் புகழ்கொடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சரிதாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சரிதாவிற்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கேட்டபோது, தண்ணீர்குடம் எடுத்து வந்தபோது வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாக புகழ்கொடி கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரிதாவின் அக்கா ஸ்ரீலட்சுமி தனது தங்கையின் தலையின் காயத்தில் சந்தேகம் இருப்பதாக ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, கண்ணகி நகர் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரிதா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சரிதாவின் தாயார் சம்பூர்ணம் தனது மகளின் மரணத்திற்கு புகழ்கொடிதான் காரணம் என்று கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார். பின்னர், புகழ்கொடியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சரிதாவை அடித்துக் கொன்றதாக புகழ்கொடி ஒப்புக்கொண்டார். மேலும், கடந்த 17-ந் தேதி வீட்டிற்கு வந்த புகழ்கொடி அசதியில் தூங்கியுள்ளார்.
புகழ்கொடி தூங்கிய பிறகு சரிதா தனது ஆண் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எழுந்த புகழ்கொடி தனது மனைவி யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், சரிதாவிற்கும் புகழ்கொடிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த புகழ்கொடி தனது மனைவி சரிதாவை ஆத்திரத்தில் அடித்து உதைத்துள்ளார். இதில், சரிதாவிற்கு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் வழிந்தோடியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த புகழ்கொடி சரிதாவை உடனே தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, கண்ணகிநகர் போலீசார் கொலை மற்றும் நடந்த சம்பவத்தை மறைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக புகழ்கொடியை கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்