சாலையில் காணாமல்போன கார் , OLX இணையதளத்தில் விற்பனை - அதிர்ச்சியில் போலீசார்
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, ரெக்கவரி வாகனம் மூலம் கடத்தி , OLX இணையதளத்தில் விற்க முயன்ற நபர் கைது.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மாயம்
சென்னை வியாசர்பாடி B.B.ரோட்டில் வசிக்கும் ரபேல் ( வயது 63 ) என்பவர் வீட்டினருகில் கார் பழுது பார்க்கும் ஒர்க் - ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராணி ( வயது 60 ) என்பவர் அவரது வெள்ளை நிற Honda Civic காரை பழுது பார்க்க விட்டு சென்றதாகவும், தான் அந்த காரை அருகில் AA ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் 01.08.2025 அன்று மாலை பார்த்த போது காரை யாரோ திருடிச் சென்றதாகவும், காரை கண்டுபிடித்து தருமாறும் ரபேல் என்பவர் P-3 வியாசர்பாடி குற்றப்பரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
OLX - இணையதளத்தில் விற்பனை ?
P-3 வியாசர்பாடி குற்றப்பரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அரவிந்த் ( வயது 20 ) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பிரதீப்ராஜா என்பவர் தெருவில் நின்றிருந்த காரை படம் பிடித்து விற்பனை செய்யப்பட உள்ளதாக OLX இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்ததும், பழைய கார்களை வாங்கி விற்கும் அரவிந்த் என்பவர் எவ்வித ஆவணங்களும், சாவியும் இல்லாமல் மேற்படி காரை வாங்கி கொள்வதாக பிரதீப்ராஜாவிடம் கூறி ரூ.1.25 லட்சத்திற்கு விலைபேசி, காரை வாங்கி கொண்டு தனியாரிடமிருந்து ரெக்கர் வாகனத்தை வாடகைக்கு எடுத்து , ரெக்கர் வாகனம் மூலம் காரை தனது இடத்திற்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
வாகனம் பறிமுதல்
அதன் பேரில், வியாசர்பாடி பகுதியில் மறைத்து வைத்திருந்த மேற்படி கார் மீட்கப்பட்டு , குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ரெக்கர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய நபரை காவல் குழுவினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அரவிந்த் , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Show Room - ல் , 85 ஐ - போன்களை திருடி விற்ற நிறுவன மேலாளர் கைது
தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் தேவநாதன் என்பவர் சென்னை போரூர், ஆற்காடு சாலையிலுள்ள ஷோரூமில் மேலாளராக செய்து வந்த கோயில்ராஜ் ( வயது 31 ) என்பவர் நிறுவனத்தின் ஐ - போன்களை திருடி விற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் கிளை ஷோரூமின் கணக்குகளை சரிபார்த்த போது , கோயில்ராஜ் நிறுவனத்தின் 85 ஐ - போன்களை திருடி விற்பனை செய்து , நிறுவன கணக்கில் வரவு வைக்காமல் தலைமறைவானதாகவும், நபரை கண்டுபிடித்து தங்களது நிறுவனத்தின் சுமார் ரூ.62 இலட்சம் மதிப்புள்ள 85 ஐபோன்களை மீட்டு தரும்படியும், தேவநாதன் T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , தலைமறைவான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கோயில்ராஜ் (வயது 31) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கோயில்ராஜ் பி.டெக் படித்து பல செல்போன் ஷோரூம்களில் வேலை செய்து வந்ததும் , இறுதியாக மேற்படி ஷோரூமில் வேலை செய்தபோது , கடன் தொல்லை காரணமாக ஷோரூமிலிருந்த ஐ - போன்களை சிறிது, சிறிதாக என 85 ஐ - போன்களை திருடி விற்றதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கோயில்ராஜ், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















