புதுச்சேரி பாரில் சென்னை கல்லூரி மாணவர் குத்திக்கொலை.. அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள் - நடந்தது என்ன?
புதுச்சேரி: நண்பன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த கத்திக்குத்தில், சிவகங்கையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழப்பு

ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவனுக்கு கத்திக்குத்து
சிவகங்கை மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீனாட்சி சுந்தரபாண்டியன் என்பவரின் மகன் மோஷிக் சண்முகபிரியன் (வயது22). இவர் செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு காட்சி ஊடகவியல் படித்து வந்தார். அவர் கல்லூரியில் படிக்கும் நண்பரான மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த ஷாஜன் (23) என்பவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் புதுச்சேரிக்கு வந்தார்.
புதுச்சேரியில் பிறந்த நாள் கொண்டாட்டம்
அவர், புதுச்சேரியில் நண்பர்களுடன் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளார். அதன்பின் அவர்கள் மிஷன் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள தனியார் ரெஸ்டோ பாருக்கு பிறந்தநாளை கொண்டாட சென்றனர். ஷாஜனின் பிறந்தநாளுக்காக ‘கேக்’ வாங்கி சென்றனர். அங்கு நண்பர்கள் அனைவரும் ஆட்டம் -பாட்டத்துடன் குத்தாட்டம் போட்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஷாஜனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது அவர்களின் அலப்பறைகள் அதிகரிக்கவே அவர்களை அங்கிருந்து வெளியேற்ற ‘பவுன்சர்கள்’ முயன்றனர்.
கைகலப்பாக மாறிய வாக்குவாதம்
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கல்லூரி மாணவர்கள் தாங்கள் பணம் செலுத்தி உள்ளோம். எங்களை எப்படி வெளியேற்றலாம் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கைகலப்பாக மாறியது. இதில் கல்லூரி மாணவர்களும், பவுன்சர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து தாக்கத் தொடங்கினர். இதனால், ரெஸ்டோ பார்களில் இருந்த மற்ற சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இதற்கிடையே ரெஸ்டோ பாரில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், பவுன்சர்களுடன் மோதலில் ஈடுபட்ட மோஷிக் சண்முகபிரியன், ஷாஜன் ஆகியோரை கத்தியால் குத்தினார். இதில் அவர்கள் இருவரும் வலியால் அலறித்துடித்தனர். உடனே அவர்கள் இருவரையும் சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே சிகிச்சை பலனின்றி மோஷிக் சண்முகபிரியன் பரிதாபமாக உயிரிழந்தார். ஷாஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இந்த வழக்கு தொடர்பாக அங்கு பணிபுரிந்த ஊழியர்களை 10-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணைக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை கொலை நடந்த ரெஸ்டோ பாருக்கு போலீஸ் டி.ஜ.ஜி. சத்திய சுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன், போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பெரியகடை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபர்களிடம் போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் ரெஸ்டோ பாரில் பணிபுரியும் ஊழியர் வில்லியனூர் அசோக்ராஜ் என்பவர் கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இந்த வழக்கில் ரெஸ்டோ பார் உரிமையாளர் ராஜ்குமார் மேலும் 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் குற்ற சம்பவங்கள்:
ரெஸ்டோபார்களில் நிர்ணயித்த நேரத்தை தாண்டியும் பார்கள் இயங்குவது, நள்ளிரவில் போதையில் வெளியேறுபவர்கள் பார் வாசலில் உருள்வது, போதையில் கார்களை தாறுமாறாக இயக்குவது என பல சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில மாதம் முன்பு முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு ரெஸ்டோபாரில் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்தவர்கள் காரை ஏற்றி பவுன்சரை கொலை செயய முய்ற்சித்த சம்பவம் நடந்தது. அதிக சத்தத்துடன் பாடல்கள் இசைக்கப்படுவதால் பல பகுதிகளில் மக்கள் புகார் தருவதும் தொடர்கிறது. தற்போது ரெஸ்டோபாரில் கல்லூரி மாணவர் கொலையானது வரை நடந்துள்ளது.





















