Crime | ஃபேஸ்புக் பழக்கம்.. அடையாளம் தெரியாத காதலரை தேடிவந்த 17 வயது பெண்.. காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்.!
செயலிகள் மூலம் மலரும் காதல் ஒருவகையில் இணைந்தாலும், பெரும்பாலான காதல் கதைகள் ஏதோ ஒரு சில பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரையும் ஏமாற்றி வருகிறது.
உலகம் முழுவதும் காதலுக்கு முகநூல், இன்ஸ்டாகிராம், பல டேட்டிங் செயலிகள் என பல மிகவும் பிரபலமாகி வருகிறது. எங்கோ ஒரு மூலையில் இருந்து ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நபர்களை காதலிக்க இந்த சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் மலரும் காதல் ஒருவகையில் இணைந்தாலும், பெரும்பாலான காதல் கதைகள் ஏதோ ஒரு சில பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரையும் ஏமாற்றி வருகிறது. இந்த செயலிகள் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் பணம் பறித்தும் தவறாக பயன்படுத்தியும் சுயலாபம் அடைகின்றனர். இதில் பாதிக்கப்படுவோர்கள்தான் ஏராளம்.
அந்த வரிசையில், தற்போது ஒரு 17 வயது சிறுமி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரை, வள்ளலார் தெருவை சேர்ந்தவர் 46 வயதான மனோகரன். இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 8 ம் தேதி கோயம்பேடு பஸ் நிலையத்தில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது 17 வயது மதிக்கத்தக்க சிறுமி, தனியாக தவித்தபடி கோயம்பேட்டில் நின்று கொண்டிருந்தார். அந்த சிறுமியை பார்த்து சந்தேகமடைந்த மனோகரன், ஏதோ தவறு நடப்பதுபோல் உணர்ந்துள்ளார். இதையடுத்து, அந்த சிறுமியுடன், நீ யார் என்று விசாரணை நடத்தியதில், பழனியைச்சேர்ந்த அந்த சிறுமிக்கு முகநூல் மூலம் ஒருவர் நண்பராக பழகியுள்ளார். நாளடையில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
அந்த நபர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருப்பதாகவும், அவரை பார்க்க பெற்றோருக்கு தெரியாமல் வந்து விட்டதாகவும், விஜயவாடா செல்வதற்கு எந்த பஸ்சில் ஏறுவது என்பது தெரியாமல் தவிப்பதாகவும் ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு பதறிப்போன மனோகரன் உடனடியாக சிறுமியை பத்திரமாக அழைத்துச்சென்று கோயம்பேடு பஸ் நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் இந்த விவகாரத்தின் வீரியத்தை அறிந்து சிறுமியின் பெற்றோரை சென்னைக்கு வரவழைத்தனர். தொடர்ந்து, பெற்றோரிடம் சிறுமி பத்திரமாக ஒப்படைக்கப்பட்டு எச்சரிக்கையும் செய்துள்ளனர். சிறுமியை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் மனோகரனை தனது அலுவலகத்துக்கு அழைத்து, கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்