அத்தையை கொன்ற இளைஞர்.. ரூ.50,000 கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நடந்த கொடூரம்..
Chengalpattu News : "50 ஆயிரம் அபராதம் விதி நீதிபதி கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார் "
சென்னை குரோம்பேட்டை 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் நடைபெற்ற கொடூர கொலை இளைஞருக்கு ஆயுள் தண்டனை தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜெயமுருகன். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 37). இவர்களுக்கு கமலகார்த்திக் (12) என்ற மகனும், அனுஷ்கா (6) என்ற மகளும் உள்ளனர். ஜெயமுருகன் கடந்த 2016 ஜூன் 15ஆம் தேதி காலை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவருடைய 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று இருந்தனர். வீட்டில் கிருஷ்ணவேணி மட்டும் தனியாக இருந்தார்.
யாரும் எடுக்கவில்லை - சந்தேகம்
பள்ளி சென்ற குழந்தைகளை வழக்கமாக மாலையில் கிருஷ்ணவேணிதான் அழைத்து வருவார். குழந்தைகளை அழைத்து செல்ல யாரும் வரவில்லை. இதனால் குழந்தைகள் தவிப்பதை பார்த்த பள்ளி நிர்வாகம் ஜெயமுருகனுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தது. உடனே ஜெயமுருகன் தன்னுடைய வீட்டுக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்கு அருகில் உள்ள உறவினரை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டில் சென்று பார்க்குமாறு கூறினார்.
கத்திக்குத்து - அதிர்ச்சி
ஜெயமுருகனின் வீட்டுக்கு அவருடைய உறவினர் சென்ற போது வீட்டில் சத்தமாக டி.வி. ஓடி கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த அவர் அங்கு கிருஷ்ணவேணி கழுத்தில் கத்திக்குத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஜெயமுருகனுக்கு உறவினர் தகவல் கொடுத்தார். உடனே இது குறித்து சிட்லபாக்கம் போலீசில் ஜெயமுருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீஸார் கைது - கொலை வழக்கு
வீட்டில் எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக எழும்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் அருண்குமாரை (24) போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அருண்குமார் மீது சிட்லபாக்கம் போலீசார், கொலை வழக்கு உட்பட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
நீதிபதி தண்டனை அறிவிப்பு
எனது தந்தை தருமலிங்கம், ஜெயமுருகனிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டு கிருஷ்ணவேணி, தரக்குறைவாகத் திட்டியுள்ளார். இதைக் கேட்டு சம்பவத்தன்று கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்தேன். தகராறு முற்றவே அங்கு கிடந்த கத்தியால், கிருஷ்ணவேணியை குத்திக் கொலை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் , வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி அருண்குமார் மீது கூறப்படுகிற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்தார். மேலும் 50 ஆயிரம் அபராதம் விதி நீதிபதி கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.