(Source: ECI/ABP News/ABP Majha)
Online Fraud : இரும்புத்திரை பட பாணியில் ஆன்லைன் மோசடி.. நாகையை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது.
வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக திருடினால் மாட்டிக் கொள்வோம். ஆகையால் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டால் தெரியாது என நினைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்
இரும்புத்திரை பட பாணியில் ஆன்லைன் மோசடி செய்த நாகையை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் ஐடிஐ முடித்துவிட்டு சென்னை பெரம்பலூரில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஐ சி எப் தொழிற்சாலையில் வெல்டர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பளம் போதுமானதாக இல்லை என்பதால் வேறு எந்த வழியில் சம்பாதிக்கலாம் என்கிற ஆலோசனையில் இந்த நண்பர்கள் ஆறு பேரும் இறங்கி உள்ளனர்.
இந்தநிலையில் இரும்புத்திரை படத்தை பார்த்த இவர்கள் அந்தப் பட பாணியில் ஆன்லைன் மோசடியில் ஈடுபடலாம் என்கிற முடிவெடுத்து கூகுளில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தங்களை இணைத்துக்கொண்டு அதில் செல்போன்கள் விற்பனைக்கு உள்ளது என்று பதிவிட்டுள்ளனர்.அதைப் பார்த்து தொடர்பு கொள்பவர்களை தங்களது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.பணம் செலுத்திய பின்பு அந்த மொபைல் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து வேறு சிம்முக்கு மாறுவதுடன் வங்கிக் கணக்கையும்வேறு ஒரு கிளையில் தொடங்கியுள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு வங்கி கணக்கு ஒரு மொபைல் எண் என்று தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட தெற்கு வீதியில் செல்போன் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மூன்று செல்போன்கள் 39 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது என்கிற விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய பிறகு அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் கடந்த 27.01.2022 அன்று 39750 ரூபாய் பணத்தை செலுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களை அடுத்த நாள் தொடர்பு கொண்டபோது மொபைல் எண் சுவிட்ச் ஆஃப் ஆகி உள்ளது. இதனையடுத்து செல்போன் கடை உரிமையாளர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையினரிடம் 29-01-2022 ல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 10 மாதங்களாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது நாகை மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் வயது 22 மற்றும் ஆகாஷ் வயது 22 என கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இருவரையும் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 39 ஆயிரத்து 750 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது பல்வேறு தகவல்களை கூறியுள்ளனர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் படித்த ஆறு பேரும் சென்னை அருகே பெரம்பூரில் ஒரே அரை எடுத்து அங்கு தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக திருடினால் மாட்டிக் கொள்வோம் ஆகையால் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டால் தெரியாது என நினைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் இவர்கள் இருவரை தவிர மற்ற நான்கு நபர்கள் மீது இராமேஸ்வரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் கோவை மதுரை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இவர்கள் ஆறு பேரும் பல நபர்களை ஏமாற்றி உள்ளனர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.