Crime: மனைவிக்கு தெரியாமல் தனி குடும்பம்! ஆட்டோ ஓட்டுநரை அடித்துக் கொன்ற காதலி - நடந்தது என்ன?
சேலத்தில் மனைவிக்கு தெரியாமல் தனிக்குடும்பம் நடத்திய ஆட்டோ ஓட்டுனரை காதலியே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் களரம்பட்டி பகுதியில் சேர்ந்தவர் பழனி. இவருக்கு கேசவன்பட்டறை பகுதியில் 7 வீடுகள் உள்ளது. அந்த வீடுகளில் வாடகைக்கு ஏழு குடும்பத்தினர் தங்கியுள்ளனர். இதில் ஒரு வீட்டில் வசிக்கும் கணவன், மனைவி கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு வராத நிலையில் வீடு பூட்டுபோட்டு கிடந்தது. இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது பற்றி அருகில் வீட்டில் வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளர் பழனிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கொலை:
இதனால் அவர் அந்த வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு கிச்சிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல் ஆய்வாளர் பேபி மற்றும் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் தலை குப்புற கவிழ்ந்தபடி அந்த வீட்டில் வசித்த ரவி என்பவர் இறந்து கிடந்தார். அப்போது தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டிருந்தது. உடல் அழுகி காணப்பட்டது.
அவரை மர்மநபர்கள் தலையில் அடித்துக்கொலை செய்து போட்டு விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டின் பூட்டு மற்றும் சமையலறையில் பதிவாகியிருந்த கைரேகை, மற்ற தடயங்களை சேகரித்தனர். பின்னர் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
தப்பிய காதலி:
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி விசாரணை பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. இதில் கொலையுண்டு கிடந்த நபர் சேலம் அஸ்தம்பட்டி இட்டேரி ரோட்டை சேர்ந்த நிஷார் பாட்ஷா(45), என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டுனராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு ஹசினா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிஷார் பாட்ஷா மீண்டும் திரும்ப வராமல் இருந்துள்ளார். ஆனால் அவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பழனிடம் வந்து தனது பெயர் ரவி என்றும், தனது மனைவி பிரியா என்றும் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தி வசிக்க வீடு கேட்டுள்ளார்.
அவரும் வாடகைக்கு வீட்டை கொடுத்துள்ளார். இருவரும் அந்த வீட்டில் தங்கியுள்ளனர். சரக்கு ஆட்டோ டிரைவர் வேலைக்கு செல்வதால் இரவு நேரத்திலும், சில சமயங்களில் மதியமும் அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு அப்பெண் வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் திரும்ப வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அந்த வீட்டிற்குள் நிஷார் பாட்ஷாவை அடித்துக் கொலை செய்து போட்டு விட்டு, உடன் தங்கி இருந்து அவரது காதலி பிரியா என்பவர் தப்பி சென்றிருப்பது காவல்துறையினர் உறுதி செய்தனர். அவர் பற்றி விசாரித்தபோது திருப்பூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்த அருள் மரியஜோசப் என்பவரது மகள் தெரியவந்துள்ளது.
வலைவீசும் போலீஸ்:
கொலையுண்ட நிஷார் பாட்ஷா தனது மனைவிக்கு தெரியாமல் பிரியா என்பவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவரை தனி குடும்பம் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவருக்குள் ஏற்பட்ட மோதலில் இக்கொலை அரங்கேறி உள்ளது.
எப்படி கொலை செய்யப்பட்டார்? ஏன் கொலை செய்யப்பட்டார்? பிரியா மட்டும் தலையில் அடித்து கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் அவருக்கு உதவி செய்தனரா? என்பது ப்ரியாவை பிடித்து விசாரித்தால் மட்டுமே தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால் தலைமறைவான பிரியாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.