விழுப்புரம்: திண்டிவனம் அருகே டாஸ்மாக் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு..!
விழுப்புரம் : திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 4 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டுப்போயுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஈச்சேரி சாலை சாரம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் வழக்கம்போல் நேற்று இரவு கடையை சூப்பர்வைசர் கிருஷ்ண மூர்த்தி அதில் உதவியாளராக பணிபுரியும் குமார் என்பவரும் இருவரும் நேற்று விற்பனையை முடித்துவிட்டு மாலை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர், இதனைத் தொடர்ந்து நோட்ட மிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 55 பெட்டிகளில் இருந்த 232 மதுபாட்டில்களை கடத்திச் சென்றுள்ளனர், இந்த நிலையில் காலையில் கடையைத் திறப்பதற்காக கடைக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி கடையின் பூட்டை உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார், இதை தொடர்ந்து ஒலக்கூர் போலீசார் மற்றும் திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் அவர்களும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர், மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொண்டு கைரேகையை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த திருட்டு குறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கிருஷ்ண மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் உதவியோடு விசாரணை மேற்கொள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக அதே கடையில் சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.திருடிச் சென்ற மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 4 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நோய் பரவலையும் கட்டுப்படுத்த வேண்டும், அதே சமயத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதன் அடிப்படையில் அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர், சேலம் உள்பட 11 மாவட்டங்களை தவிர்த்து, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதன்படி, 35 நாட்களுக்கு பிறகு கடந்த 14-ந்தேதி முதல் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மதுக்கடைகள் திறக்கப்பட்டதும், மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் மதுபானங்களை வாங்குபவதற்காக படையெடுத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மது வகைகளை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். இதனால் இருப்பு இருந்த மதுபானங்கள் விற்று தீர்ந்தது. தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ.164.87 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

