Crime: நகைக்கடையில் கைவரிசை காட்டிய 26 வயது இளைஞர்.. 2.7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீஸ்..
கோவை மாவட்டத்தில் நகை கடையில் நிகழ்ந்த கொள்ளை சமபவத்தை தொடர்ந்து சுமார் 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பிரபல நகைக் கடையில் கொள்ளை அடித்தது 26 வயது இளைஞர் விஜய் என்பது தெரிய வந்துள்ளது.
பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் கிளை, கோவை காந்திபுரம் நூறடி சாலையில் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைக்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் 27 ஆம் தேதியன்று இரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். பின்னர் 28 ஆம் தேதி காலையில் வழக்கம் போல கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்த போது, 200 சவரண் தங்கநகைகள், வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, கடையின் ஏசி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்த பகுதி வழியாக உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் கடைக்குள் நுழைந்த நபர் கண்காணிப்பு கேமரா முன்பு அணிந்திருந்த சட்டையால் முகத்தை மறைத்த மாதிரி சென்றதும், அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததும் தெரியவந்தது. கோவை நகரின் முக்கிய பகுதியில் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் விஜய் (வயது 26) , தருமபுரி அரூரை சேர்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டது. கொள்ளையனை பிடிக்க ஆனைமலையில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்கிடையில், ஆனைமலையில் விஜய் நண்பன் சுரேஷ் வீட்டில் இருந்தும், அரூரில் உள்ள விஜய் வீட்டில் இருந்தும் மொத்தம் 2.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.