Crime : திருமணம் செய்வதாக ஒருவரும், வேலை வாங்கி கொடுப்பதாக இருவரும்.. ஆந்திராவில் அரங்கேறிய பாலியல் கொடூரம்..!
மனநலம் குன்றிய பட்டியல் இனப்பெண்ணை மருத்துவமனையில் மூன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், திருமணம் செய்வதாக உறுதியளித்து அந்த பெண்ணை அங்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனை வளாகத்தில் 23 வயதான பட்டியல் இனத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புதன்கிழமை காவல்துறையில் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நகர காவல்துறை ஆணையர் காந்தி ராணா டாடா கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் காவல்துறையை அணுகி பெண் காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்த பெண் கடைசியாக மருத்துவமனையின் ஒப்பந்த ஊழியர் தாரா ஸ்ரீகாந்துடன் காணப்பட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ஸ்ரீகாந்த் உறுதியளித்து பெண்ணை செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு வரச் செய்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த அவர், திருமணம் செய்வதாக உறுதியளித்து அந்த பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் இரவு முழுவதும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து, மருத்துவமனையின் துப்புரவு பணியாளர்கள் அறையில் விட்டுவிட்டார். அறையில் அப்பெண்ணை பார்த்ததும், துப்புரவுப் பணியாளர்களான சென்னு பாபு ராவ் மற்றும் ஜே பவன் கல்யாண் ஆகிய இருவரும், மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்” என்றார்.
பின்னர், ஸ்ரீகாந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் துப்புரவு பணியாளர்கள் அறையில் இருந்து கயிற்றால் கட்டப்பட்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்