Crime: கல்லூரி முதல்வர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு - என்ன நடந்தது சேலம் கல்லூரியில்?
முதலாம் ஆண்டு மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் மீது சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சேர்ந்த சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் வணிகவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த பாலாஜி மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர் பாலியல் சீண்டல்கள்:
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லூரி முதல்வராக பாலாஜி பொறுப்பேற்ற பிறகு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியைகள் அல்லாத பணியாளர்கள் பணிகள் என பலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவிகள் தர்ணா:
இது தொடர்பாக உயர் கல்வித் துறைக்கு புகார்கள் சென்ற காரணத்தால், தர்மபுரியை சேர்ந்த கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் கல்லூரிக்கு நேரில் வந்து அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து முதல்வர் பாலாஜிக்கு மெமோ கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கல்லூரிக்கு செல்லும் உத்தரவுடன் பாலாஜி கல்லூரிக்கு வந்தார். அப்போது கல்லூரி நுழைவாயிலில் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து மாணவிகள் பேராசிரியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்சோ வழக்கு:
மேலும் பாலாஜியை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்களையும் எழுப்பினர். இதனிடையே பாலாஜி தன் மீது செலுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகளை மறைக்க சிலர் மாணவிகளை தூண்டிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து விசாரணைக்கும் தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரை கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பாலாஜி மீது சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.