(Source: ECI/ABP News/ABP Majha)
”லஞ்ச் கம்மியா கொடுங்க; அப்போதான் பள்ளியில் பாத்ரூம் போக வேண்டாம்” - குழந்தையின் காரணத்தை கேட்டு அதிர்ந்த தாய்!
"தான் குறைவாக சாப்பிட்டால்தான் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது," என்று குழந்தை கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் புகாரளித்துள்ளார்.
டெல்லி மாநிலம் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுமியை, கிட்டத்தட்ட ஒரு வாரமாக கழிவறைக்கு செல்லும்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவு குறைவாக வைக்கச்சொன்ன சிறுமி
மதிய உணவுக்கு லஞ்ச் பாக்ஸில் உணவு கொஞ்சமாகக் கொடுங்கள் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கேட்டுள்ளார். அதில் ஏற்பட்ட சந்தேகத்தால் இந்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஏன் குறைவான உணவு கேட்கிறார் என்று காரணம் கேட்டதற்கு, தான் குறைவாக சாப்பிட்டால்தான் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்று கூற தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரை துருவித் துருவி கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட துப்புரவு பணியாளர் அர்ஜுன் என்பவர் அங்கு இருப்பார் என்றும், தகாத முறையில் தன்னை தொடுவார் என்றும் தனது தாயிடம் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த புகார்
துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) சந்தன் சவுத்ரி ஊடகங்களிடம் பேசுகையில், "ஆகஸ்ட் 1ம் தேதி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது குறித்த புகார் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பஞ்சீலில் உள்ள சிராக் டெல்லி மேம்பாலம் அருகே உள்ள பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. ஹவுஸ் காஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த பள்ளி வருகிறது.
இடத்தையும் நபரையும் அடையாளம் காட்டிய சிறுமி
பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி, அவரது தாய் மற்றும் அத்தையுடன் போலீசார் பள்ளிக்கு வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் குழந்தை, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை போலீசாரிடம் காண்பித்துள்ளார். அதோடு, குற்றம் சாட்டப்பட்ட துப்புரவு தொழிலாளி அர்ஜுனையும் அடையாளம் காட்டினார்.
வாக்குமூலத்தின்படி வழக்குப்பதிவு
டெல்லி மகளிர் ஆணையத்தின் ஆலோசகர் முன் செவ்வாய்க்கிழமை குழந்தை மற்றும் அவரது தாயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் கூற்றுப்படி, அவர் கழிவறைக்கு செல்லும்போதெல்லாம், அந்த துப்புரவு பணியாளர் பாலியல் துன்புறுத்தல் செய்வார் என்று கூறுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அர்ஜுன் குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தந்தை மத்திய அமைச்சகத்தில் பணிபுரிகிறார். குற்றம் சாட்டபடுள்ள துப்புரவு பணியாளர் அர்ஜுன் குமார் ஹைபத்பூர், கவுதம் புத்த நகர் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டது.