வேறொருவருடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த 22 வயது காதலி: ஆத்திரத்தில் 19 வயது இளைஞர் செய்த கொடூரம்!
அவரது பெற்றோர் ரச்சனாவுக்கு வேறொரு நபருடன் திருமணத்தை நிச்சயம் செயதுள்ளனர். அந்த திருமணத்திற்கு தன்னை காதலித்த ரச்சனாவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்ததற்காக காதலி குடும்பத்தை கத்தியால் தாக்கி, சகோதரனை துப்பாக்கியால் சுட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 30) அன்று 19 வயது இளைஞர் ஒருவர் காதலியின் சகோதரனை கொன்று, அவரது குடும்ப உறுப்பினர்களைக் காயப்படுத்தி உள்ளார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் காதல் தோல்வியால் ஏற்பட்டிருக்கிறது என்று மூத்த காவல் துறை ஆய்வாளர் தினேஷ் பிரபு தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட ரிங்கு கங்வார், உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்த்தை சேர்ந்தவர் ஆவார். 22 வயதாகும் ரச்சனா கங்வார் அவருடன் காதல் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ரச்சனாவும் ரிங்குவும் சில நாட்களாகவே காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு அவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவிப்பதாக தெரியவில்லை.
இவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் இசையவில்லை. இதன் காரணமாக அவரது பெற்றோர் ரச்சனாவுக்கு வேறொரு நபருடன் திருமணத்தை நிச்சயம் செயதுள்ளனர். அந்த திருமணத்திற்கு தன்னை காதலித்த ரச்சனாவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. அதனை அறிந்த ரிங்கு கடும் ஆத்திரம் கொண்டுள்ளார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபமடைந்த ரிங்கு, காலை வேளையில் சிர்சா கிராமத்தில் உள்ள ரச்சனாவின் வீட்டிற்குள் புகுந்து, அவரையும் அவரது 50 வயது தாயார் மாயாதேவியையும் கத்தியால் தாக்கி உள்ளார். ரத்தம் கொட்ட கொட்ட அவர்களை ரிங்கு தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த 28 வயதாகும் ரச்சனாவின் சகோதரர் ரவீந்திரபால் இதனிடையே தலையிட்டு தன் குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
ரிங்கு அவரை துப்பாக்கியை எடுத்து நெஞ்சிலேயே சுட்டுள்ளார். சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரிங்கு அவர்களின் வீட்டை விட்டு தப்பி ஓடி 20 மீட்டர் தொலைவில் தன்னைத்தானே அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். தன்னை சுட்டுக்கொண்ட அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என போலீசார் தகவல் தெரிவித்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். எஸ்பி தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண் ரச்சனாவும் அவரது தாயார் மாயாவும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிலிபிட் எஸ்பி தினேஷ் பி கூறுகையில், "முதல் கட்ட விசாரணையில் காதல் விவகாரம் என்று தெரிய வந்துள்ளது. இருவரது உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது, மேலும் தகவல்கள் விசாரணைக்கு பிறகு தெரியவரும்"என்றார்.