அம்பேத்கர் நினைவு தினம்: குவிக்கப்பட்ட போலீசார்...! தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு!
மயிலாடுதுறை தலைஞாயிறு கிராமத்தில் அம்பேத்கர் மரியாதை செலுத்தும் நிகழ்வு எதிர்ப்பு காரணமாக 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய தலைவர்களை இன்னும் நம் நாட்டில் சாதிய தலைவராக பார்க்கும் மனப்பான்மை இன்றளவும் மாறிய பாடில்லை. அதற்கு உதாரணமாக தேசிய தலைவர்களை சமூக ரீதியாக கொண்டாடும் மனநிலைமை தமிழகத்தில் பெருமளவு பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. அதன் காரணமாக இருவேறு சமூகங்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6 -ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டு சமூகத்தினர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து மேலும் கலவரம் ஏற்படாதவாறு தடுத்தனர்.
இந்நிலையில் டிசம்பர் 6 -ம் தேதி அம்பேத்கர் தினைவு நாளன்று தலைஞாயிறு மதகடி பகுதியில் அவரது திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் அதே நாளில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி அனுமதி கோரி இருந்தனர். மேலும், அம்பேத்கர் நினைவு தின அனுசரிப்பு நிகழ்வுக்கு அனுமதி வழங்க கூடாது எனவும் மனு அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் இப்பிரச்சனை தொடர்பாக இருசமூகத்தினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததாலும், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கடிதம் அளித்ததை தொடர்ந்து, பொது அமைதி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மேலும், பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட வழிவகுக்கும் என்பதால், பொது அமைதி சமூக நல்லிணக்கம், மக்கள் அச்சத்தைப் போக்கும் விதமாக தலைஞாயிறு கிராமம் மதகடி பகுதியிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 5 நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 05.12.2022 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 10.12.2022 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் 2 நபர்களுக்கு மேல் கூடி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டு, 144(3) தடை உத்தரவை அடுத்து அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற