Crime: சென்னையில் உள்ள பிரபல நகை கடையில் ரூ.1.12 கோடி மோசடி: வசமாக சிக்கிய கடை ஊழியர்
சென்னையில் உள்ள குமரன் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் மாதாந்திர தங்க நகை சேமிப்பு சீட்டு திட்டத்தில் பொதுமக்கள் மாதாந்திர தவணையாக ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் செலுத்தி வந்தனர்
தங்கத்தின் மீது ஈர்ப்பு இல்லாதவர்களே இருக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக பெண்களுக்கு தங்கம் என்பது ஒரு வகையான சேமிப்பு. நகைகள் போட்டு அழகுப் பார்பதைவிட, ஏதாவது நெருக்கடியான காலத்தில் பணத் தேவைக்கு தங்க நகைகள் உதவும் என்ற எண்ணத்தில் அவர்கள் தங்களது சொற்ப வருமானத்திலும் சிறு பகுதியை தங்கம் வாங்குவதறகு செலவழிப்பார்கள். அப்படி, பல நகை கடைகளில் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்துவது இவர்களின் வழக்கம். அப்படியிருக்கையில், சென்னையில் உள்ள நகை கடையில் ஒருவர் மக்களிடம் வாங்கிய பணத்தை மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள குமரன் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் மாதாந்திர தங்க நகை சேமிப்பு சீட்டு திட்டத்தில் பொதுமக்கள் மாதாந்திர தவணையாக ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் செலுத்தி வந்தனர். 11 மாதங்கள் பணம் கட்டி முடிந்தவுடன், பொதுமக்கள் செலுத்திய தொகைக்கேற்ப தங்கநகைகள் சலுகை விலையில் கொடுக்கப்படும்.
இந்த திட்டத்தில் பொதுமக்கள் செலுத்திய பணம் பற்றிய தகவல் கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தது. ஆனால் அதற்கான தொகை உரிய வங்கி கணக்கில் செலுத்தப்படாமல் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக, புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கடை ஊழியர்களான பிரபு, சிவானந்தம், பூபதி, ஸ்டாலின் மற்றும் வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து ரூ.1.12 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. கடை ஊழியர் பிரபு (வயது 31) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதோடு தொடர்புள்ள மற்றவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்