Repo Rate: ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் என்ன? விலைவாசி குறையுமா?...
RBI: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.35 சதவீதம் அதிகரித்து, 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
சரி, ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன, ஏன் உயர்த்தப்படுகிறது, உயர்வால் ஏற்படும் தாக்கம் என்ன? இதனால் யாருக்கு சாதகம், பாதகம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
வங்கிகளுக்கெல்லாம் வங்கி:
இந்தியாவிலுள்ள வங்கிகளுக்கான விதிமுறைகள், செயல்படும் முறைகள் குறித்தான செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்து வருகிறது. இதையடுத்து எஸ்.பி.ஐ உள்ளிட்ட வணிக வங்கிகளை கட்டுப்படுத்தும் வங்கியாக இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுகிறது.
மேலும், வணிக வங்கிகளில் மூலதனம் குறைவாக இருக்கும் போது கடன் கொடுத்து, திவாலாகாமல் காப்பாற்றும் பணிகளையும், இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும். ஆகையால், வங்கிகளுக்கு கடன் கொடுப்பதால் இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கெல்லாம் வங்கி என அழைக்கப்படுகிறது.
பணவீக்கம்:
வங்கிகளில், அதிக பணம் இருந்தால், மக்களுக்கு அதிக கடன்களை வங்கிகள் வழங்கும். அதனால் மக்கள் கைகளில் பண புழக்கம் அதிகரிக்கும். இதனால், மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை அதிகரிக்கும். மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை ஏற்படும் போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதுவே பணவீக்கம் என அழைக்கப்படுகிறது.
எனவே பணவீக்கத்தை குறைக்க வேண்டுமானால் ( அதாவது பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ), மக்களிடம் பணப்புழக்கத்தை குறைக்க வேண்டும்.
ஆகையால், வங்கிகளில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், கடன் வாங்குபவர்கள் குறைய தொடங்குவார்கள். கடன் வாங்குவது குறையும் போது, மக்களிடம் பணப்புழக்கம் குறையும். பணப்புழக்கம் குறைந்தால் பொருட்களை மக்கள் வாங்குவது குறையும். பொருட்களை வாங்காத போது, அதன் விலை குறைய தொடங்கும். பணவீக்கமும் குறையும்.
எனவே ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம் என அறிந்து கொண்டோம்.
ரெப்போ விகிதம்:
எனவே ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ விகிதம் என்றும், வங்கிகள், ரிசர்வ் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதம், ரிவர்ஸ் வட்டி விகிதம் உள்ளிட்டவை முதன்மையான கருவிகளாக பயன்படுகிறது.
வட்டி விகிதம் உயர்வு:
ரஷ்யா- உக்ரைன் போர், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், உலகளவில் பணவீக்கம் நிலவி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் பணவீக்கம் நிலவுகிறது. இந்நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதத்தை உய்ர்த்தியுள்ளதால், ரிசர்வ் வங்கியிடமிருந்து, வணிக வங்கிகள் உள்ளிட்டவை கடன்கள் வாங்குவதை குறைக்க கூடும். இதையடுத்து, வணிக வங்கிகளிடம் பணம் குறைவாக இருக்கும் காரணத்தால், மக்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தையும் அதிகரிக்கும். அதிக வட்டி காரணமாக, மக்கள் வாங்கும் கடன்களை தவிர்க்க கூடும். இதையடுத்து மக்களிடம் பணம் குறைவாக இருக்கும் காரணத்தால், பொருட்களை வாங்க மாட்டார்கள். பொருட்களை வாங்குவது குறையும், பொருட்களின் விலையும் குறையும், பணவீக்கமும் குறையும்.
Highlights of Monetary Policy announcement made by @RBI Governor @DasShaktikanta on December 07, 2022
— RBI Says (@RBIsays) December 7, 2022
#rbitoday #rbigovernor#rbikehtahai #RBIPolicyhttps://t.co/dcGYbtj7Zf pic.twitter.com/Z64FMWmtae
நாட்டின் பணவீக்கம், இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி மூன்று நாட்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த ஆய்வு கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.35சதவீதம் உயர்த்துவதுவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார். இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பாதகமான சூழல்:
ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ( ரெப்போ வட்டி விகிதத்தை ) உயர்த்தியதன் மூலம் வங்கிகள் வழங்கும் கடன்கள் உயரக்கூடும்.
குறிப்பாக வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இது கடன் வாங்குபவர்களின் இஎம்ஐ-களில் ( மாத தவணை ) நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருபவர்களுக்கும் பொருந்தும். அதாவது கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் 2.25 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அப்படியானால் இனி வரும் காலங்களில் கடன்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
சாதகமான சூழல்:
பணப்புழக்கம் குறைவதால், ரூபாய்க்கான தேவை அதிகரிக்கும்.
இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய்க்கான மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். மேலும், வங்கிகளில் சேமிப்பு மேற்கொள்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும், பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதால், விலைவாசி சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.