வருடாந்திர சீரமைப்பு பணி - 18 நாட்கள் ஆலையை மூடும் டொயோட்டா கிர்லோஸ்கர்
வருடாந்திர சீரமைப்பு பணிக்காக இன்று தொடங்கி ஏப்ரல் 14 வரை 18 நாட்கள் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை முடுகின்றது.
வருடாந்திர சீரமைப்பு பணிக்காக இன்று தொடங்கி ஏப்ரல் 14 வரை 18 நாட்கள் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை முடுகின்றது. இந்த சீரமைப்பு பணி நடக்கும் நாட்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க, குறைந்த அளவிலான பணியாளர்கள் உரிய பாதுகாப்பு செயல்படுவார்கள் என்று நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் விக்ரம் கிர்லோஸ்கர் தலைமையின் கீழ் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை பல ஆண்டுகளாக மோட்டார் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. அதே போல இந்தியாவில் டொயாட்டோ நிறுவனம் SUV எனப்படும் பெரிய ரக கார்கள் உற்பத்தியில் பெரும் பங்கை வகித்து வருகின்றது. கிய்ச்சிரோ டொயோட்டா என்பவரால் 1930-களில் ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு டொயோட்டா நிறுவனம் தொடங்கப்பட்டது. பல நாடுகளில் பல வகை கார்களை அறிமுகம் செய்துள்ள இந்த நிறுவனம் அண்மையில் முதல் முறையாக எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் கார்களின் விலை அதிக அளவில் ஏற்றம்பெற்றது. இந்த விலையேற்றத்திற்கு டொயோட்டா நிறுவனமும் விதிவிலக்கல்ல. இதுகுறித்து டொயாட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம் வெளியிட்ட பதிவில், டொயோட்டா கேம்ரி கார்கள் தற்போது முன்பைவிட ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு சுமார் 40.59 லட்சத்திற்கு விற்பனையாகவுள்ளது. மேலும் டொயோட்டா கிரிஸ்டா பேஸ்லிப்ட் கார்கள் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
தற்போது வருடாந்திர சீரமைப்பிற்காக உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் வாகனங்களின் விநியோகம் மற்றும் சர்விஸ் தொடர்பான விஷயங்களில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.