Tech Mahindra: 41% இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா - அதிரடியாக எடுத்த முடிவு, 6000 பேருக்கு வேலையா? வாவ்
Tech Mahindra: டெக் மஹிந்திரா நிறுவனம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 41 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
Tech Mahindra: டெக் மஹிந்திரா நிறுவனம் நடப்பு நிதியாண்டில், 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
டெக் மஹிந்திராவின் வருவாய் சரிவு:
நாட்டின் ஐந்தாவது பெரிய மென்பொருள் நிறுவனமான டெக் மஹிந்திரா, கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவில் உள்ள பலவீனம் காரணமாக, அதன் மதிப்பீடுகளுக்குக் கீழே நான்காம் காலாண்டின் வருவாய் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் 661 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை காட்டிலும் 41 சதவிகிதம் குறைவாகும். அதன் ஒட்டுமொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கிற்கு பங்களிக்கும் தகவல் தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 16.5% சரிவைக் கண்டது. கடந்த நிதியாண்டின் மொத்த வருவாய் 51.2 சதவிகிதம் சரிவை சந்தித்து 4 ஆயிரத்து 965 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.
வருவாய் சரிய காரணங்கள் என்ன?
புனேவை தளமாகக் கொண்ட டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 757 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தொடர்ந்து உயர்ந்த பணவீக்கம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை விருப்பமான தொழில்நுட்ப செலவினங்களைக் குறைக்கத் தள்ளியுள்ளன. தொழில்துறை அமைப்பான நாஸ்காம் 2024 நிதியாண்டில் தொழில்நுட்பத் துறையில் ஒட்டுமொத்த வருவாய் வளர்ச்சி பாதியாக 3.8% ஆகக் குறைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கூட, கணித்ததை விட குறைவான வருவாயைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா குழும் நிறுவனத்தின் கடந்த காலாண்டின் நிகர புதிய ஒப்பந்த முன்பதிவுகளின் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். முந்தைய நிதியாண்டின் காலகட்டத்தில் 592 மில்லியன் டாலர்களாகவும், கடந்த நிதியாண்டின் முந்தைய காலாண்டில் 382 மில்லியன் டாலர்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
6000 பேருக்கு வேலைவாய்ப்பு:
2024-25 நிதியாண்டில் மொத்தம் 6000 ஃப்ரெஷர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. கேம்பஸ் இண்டர்வியூ மூலம், ஒவ்வொரு காலாண்டிற்கு ஆயிரத்து 500 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 50 ஆயிரம் ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பயிற்சி அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்தே வளர்ச்சியை பதிவு செய்வோம் என, டெக் மஹிந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடயே, நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 1,45,455 ஆக இருந்தது. அந்த காலகட்டத்தில் 795 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.