இனி A To Z ஒரே App... சூப்பர் App-ஆல் உருவாகும் போட்டி... ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைக்கும் பாரம்பரிய நிறுவனங்கள்
பிக் பாஸ்கட், ஒன்எம்ஜி, லினக்ஸ் லேப், அதுல்யா ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கி இருக்கிறது.
புதுயுக டெக்னாலஜியில் இந்தியாவின் பாரம்பரிய நிறுவனங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கையகப்படுத்தி அதனால் மூலம் சந்தையை கைப்பற்ற இவை திட்டமிட்டுள்ளது. டாடா, ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமங்கள் சூப்பர் ஆப் என்னும் ஒருங்கிணைந்த செயலியை கொண்டுவர திட்டமிட்டுவருகின்றன. இதற்காக ஒவ்வொரு குழுமமும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைத்து வருகின்றன.
டாடா
153 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாடா குழும் இதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் ஆப்-க்கு நியூ (TataNeu) என பெயரிட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுபட்டுவருகிறது ஏற்கெனவே பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் விரிவு படுத்துவதற்காக 200 கோடி டாலர் தொகையை முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது. மேலும் பிற முதலீட்டாளர்களிம் சிறிய பங்குகளை விற்று 500 கோடி டாலர்கள் தொகையை திரட்டவும் டாடா குழுமம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது சோதனை அடிப்படையில் இந்த செயலியை டாடா குழுமத்தின் பணியாளர்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே ரீடெய்ல் வாடிக்கையாளர்களை டாடா குழுமம் கையாண்டு வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ்கட், ஒன்எம்ஜி, லினக்ஸ் லேப், அதுல்யா ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கி இருக்கிறது.
அதானி
இந்த போட்டியில் மிக சமீபத்தில் அதானி குழுமம் இணைந்திருக்கிறது. கடந்த ஜனவரியில் இதற்கான திட்டத்தை அதானி குழுமம் திட்டமிட்டது. அதானி டிஜிட்டல் லேப்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கியது. 40 கோடி வாடிக்கையாளர் எதாவது வகையில் அதானி குழுமத்துடன் பரிவர்த்தனையில் இருக்கிறார்கள். இவர்களை இணைப்பதற்காக சூப்பர் ஆப்ஸ் கொண்டு வர இருக்கிறது.
டிஜிட்டல் உலகத்தின் பெராரியாக அதானி டிஜிட்டல் இருக்க வேண்டும் என குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்திருக்கிறார். அதானி ஏர்போர்ட், அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர், அதானி எலெக்ட்ரிசிட்டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களை சந்தித்துவருகிறது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்களை கையாளும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் இணைத்து வருகிறது. டிராவல் துறையில் உள்ள கிளியர் ட்ரிப் என்னும் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கி இருக்கிறது. அதேபோல மும்பை ரீடெய்ல் டிராவல் என்னும் நிறுவனத்தில் 74 சதவீத பங்குகளையும் அதானி குழுமம் வாங்கி இருக்கிறது.
ரிலையன்ஸ்
அடுத்ததாக ரிலையன்ஸ் நிறுவனமும் சூப்பர் ஆப்-க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. மைஜியோ என்னும் செயலியை சூப்பர் ஆப்- ஆக மாற்ற ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுவருகிறது. ஏற்கெனவே ரிலையன்ஸ் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் சில நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது.
ஜஸ்ட் டயல், எம்எம் ஸ்டைல், ரித்திகா உள்ளிட்ட நிறுவனங்களை வாங்கி இருக்கிறது. நெட்மெட்ஸ், அர்பன் லேடர் உள்ளிட்ட நிறுவனங்களையும் வாங்கி இருக்கிறது.இந்த நிலையில் ஐடிசி நிறுவனமும் சூப்பர் ஆப்-யை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. MAARS (Metamarket for Advanced Agriculture and Rural Services) என்னும் பெயரில் இந்த செயலி இருக்கும் என தெரிவித்திருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்கள் சூப்பர் ஆப்-னை அறிமுகம் செய்ய இருப்பதால் பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனையில் பாதிப்பு இருக்க கூடும் என பல ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
இதுபோன்ற பெரு நிறுவனங்களின் சூப்பர் ஆப்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது நிச்சயம்.