Tata Sons: வெடித்தது பிரச்னை.. இரண்டாக உடைந்த டாடா அறக்கட்டளை? சால்ட் டூ சாஃப்ட்வேர், நடப்பது என்ன?
Tata Sons: டாடா குழுமத்தில் வெடித்துள்ள பிரச்னையால் அது இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tata Sons: டாடா குழுமத்தைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர், டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்னை?
நாட்டின் மிகவும் முன்னணி மற்றும் நம்பகமான ப்ராண்டாக டாடாவின் பெயர் திகழ்கிறது. உப்பு தொடங்கி விமான சேவை வரை என, ஏராளமான துறைகளில் இந்த குழுமம் வலுவாக காலூன்றியுள்ளது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளித்து இருப்பதோடு, நாட்டின் தொழில்துறை மற்றும்பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தான், டாடா குழுமத்தின் நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையில் ஒருமித்த கருத்துகள் எட்டப்படாமல் பிரச்னை ஏற்பட்டுள்ளதகாவும், அதன் விளைவாக டாடா சன்ஸ் அறக்கட்டளையில் உள்ள உறுப்பினர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா, டாடா சன்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர், நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சந்திப்பில் பேசப்பட்டது என்ன?
இந்த சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன? என்பது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. நோயால் டாடா மற்றும் டாடா சன்ஸ் அலுவகலத்தை தொடர்புகொண்டபோதும், எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. டாடா அறக்கட்டளையை சேர்ந்த அறங்காவலர்கள் குழுமத்தின் பிரச்னையை மத்திய அரசிடம் கொண்டு சென்றதாகவும், அதனை ஆராய்ந்து தீர்வு காண அரசு முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதால், டாடா பிரச்னைக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ரத்தன் டாடா மறைந்த (அக். 9) ஓராண்டுக்குள்ளாகவே டாடா குழுமத்தில் இந்த பிரச்னை உருவெடுத்துள்ளது. வரும் 10ம் தேதி குழுமத்தின் போர்ட் மீட்டிங்கும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 156 ஆண்டுகளாக இயங்கி வரும் டாடா குழுமமானது, சுமார் 400-க்கும் அதிகமான நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதில் 30 பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா அறக்கட்டளையின் முக்கியத்துவம்:
சால் தொடங்கி சாஃப்ட்வேர் வரை என பல்வேறு பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி, 180 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான குழுமமாக திகழும் டாடா சன்ஸ் மீது, டாடா அறக்கட்டளை அதிகப்படியான செல்வாக்கினை கொண்டுள்ளது. அதவாது குழுமத்தின் 66 சதவிகித பங்குகளை தன்வசம் வைத்துள்ளது. இதனால் டாடா குழுமத்தின் சர்வதேச விதிகளின்படி, டாடா சன்ஸ் தொடர்பான சில விஷயங்களுக்கு டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதில் ரூ.100 கோடிக்கு மேல் முதலீடுகள் அல்லது தலைவரை நியமித்தல்/நீக்குதல் ஆகியவை அடங்கும். தனது சகோதரரின் மறைவை தொடர்ந்து அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்ற நோயல் டாடா, அங்கு தனது அதிகாரத்தை நிலைநாட்ட போராடுவதாக கூறப்படுகிறது. குடும்பப் பெயரை கொண்டு அவர் தலைவர் பதவிக்கு வந்துவிட்டாலும், அவருக்கான ஒத்துழைப்பு என்பது கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா குழுமத்தில் பிரச்னை என்ன?
அறக்கட்டளை தற்போது இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளதாம். தலைவர் நோயல் தலைமையிலான பிரிவில் துணை தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனராம். அதேநேரம், மெஹ்லி மேஸ்திரி தலைமையிலான எதிர் கோஷ்டியில் 4 அறங்காவலகர்கள் உள்ளனராம். இந்த குழுவானது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.37 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குடும்பத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. முக்கியமான முடிவுகளில் இருந்து தன்னை விலக்கியதற்கு மெஹ்லி மேஸ்திரி அத்ருப்தி தெரிவித்ததை தொடர்ந்து பிரச்னை வெடித்ததாக கூறப்படுகிறது.





















