தங்க பத்திரங்கள்: இப்போது முதலீடு செய்யலாமா?
தங்கத்தை பாதுகாப்பதும் பெரும் சிக்கல். வங்கி லாக்கரில் வைக்கவேண்டும் என்றாலும் பலவிதமான வழிமுறைகள் உள்ளன. இதற்காக கொண்டுவரப்பட்டதுதான் தங்கப் பத்திரங்கள்.
சிறு முதலீட்டாளர்களின் தவிர்க்க முடியாத முதலீடு தங்கம். ஆனால் தங்கத்தை நேரடியாக ஆபரணமாக வாங்குவதால் முதலீட்டாளர்களுக்கு செய்கூலி சேதாரம் என பல செலவுகள். அதே சமயம் அந்த தங்கத்தை பாதுகாப்பதும் பெரும் சிக்கல். வங்கி லாக்கரில் வைக்கவேண்டும் என்றாலும் பலவிதமான வழிமுறைகள் உள்ளன. இதற்காக கொண்டுவரப்பட்டதுதான் தங்கப் பத்திரங்கள். (sovereign gold bonds)
கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த பத்திரங்கள் அமல்படுத்தப்பட்டது இந்தத் திட்டம். தங்கத்தின் பலனும் கிடைக்கும். அதே சமயத்தில் இது டிஜிட்டல் வடிவில் இருக்கும். 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரையில் 31,290 கோடி ரூபாய் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
13-ஆம் தேதி வரை
நடப்பு நிதி ஆண்டில் ஐந்தாவது முறையாக தங்கம் பத்திரங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அரசாங்கத்தின் சார்பாக ரிசர்வ் வங்கி வெளியிடுவதால் இந்த பத்திரத்துக்கு உத்தரவாதம் மிக அதிகம். அதாவது முதிர்வு காலத்தில் பணம் கிடைக்குமா என்னும் கவலை தேவையில்லை. இந்தியர்கள் மட்டுமே இந்த பத்திரத்தில் முதலீடு செய்யமுடியும். ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 4 கிலோ தங்கம் மட்டுமே முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் கிராம் அளவில் முதலீடு செய்யலாம்.
தங்கத்தின் உயர்வுக்கு ஏற்ப முதிர்வின்போது பெற்றுக்கொள்ளலாம். அதே சமயம் ஒரு நிதி ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி வழங்கப்படும். நாம் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தின் மீது எந்த வருமானமும் கிடைக்காது. ஆனால் இதுபோன்ற பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் விலையேற்றமும் கிடைக்கும். தவிர ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் கிடைக்கும். இந்த வட்டிக்கு வருமான வரி வரம்புக்கு, ஏற்ப வரி செலுத்த வேண்டும். ஆனால் முதிர்வின்போது, நீண்டகால மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கிராம் ரூ.4,790
கடந்த மூன்று நாட்களின் சராசரி விலையை அடிப்படையாக வைத்து இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முழுவதும் இணையம் மூலமாகவே பரிவர்த்தனை செய்யும்பட்சத்தில் கிராமும் ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தள்ளுபடிக்கு பிறகு ரூ.4940.
எட்டு ஆண்டுகள் வரை முதலீட்டை தொடரவேண்டும். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வு தொகையை அன்றைய தங்கத்தின் விலைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம். இருந்தாலும் ஐந்தாண்டுக்கு பிறகு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 13 வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். ஆகஸ்ட் 17-ஆம் தேதி தங்க பத்திரங்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். தபால் நிலையங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாக இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும்.
ஆபரணத் தேவைக்காக தங்கம் வாங்குவது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முதலீட்டுக்காக தங்கம் வாங்குவதாக இருந்தால் இதுபோன்ற தங்கம் கடன் பத்திரங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். பாதுகாப்பு, தங்கம் ஏற்றத்தின் மீதான லாபம் அப்படியே கிடைக்கும், செய்கூலி சேதாரம் என பெரும் தொகையை இழக்க தேவையில்லை.
கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவதால் தங்கம் வாங்குவது குறித்து பலரும் யோசித்திருப்பார்கள். ஒரு கிராம் தங்கம் ரூ.4,391 என வர்த்தகமாகும்போது ஏன் அதிக தொகைக்கு வாங்க வேண்டும் என நினைக்கலாம். பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படுவது 22 காரட் தங்கம். ஆனால் தங்க கடன் பத்திரங்களில் உள்ளது 24 காரட் தங்கம். அதனால் இந்த விலை வித்தியாசம் முதலீட்டு முடிவுகளை பாதிக்காது என நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதுபோன்ற பத்திரங்களையும் கவனிக்கலாம்.
தற்போது ஐந்தாவது கட்ட கடன் பத்திரம் 13-ஆம் தேதியுடன் முடிவடையும். அடுத்ததாக ஆறாம் கட்ட தங்க பத்திரங்கள் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை இருக்கும். அப்போதும் முதலீடு செய்யலாம்.