Rs.2,000 notes exchanged: தமிழ்நாட்டில் 3 வங்கிகளில் மட்டும் இவ்வளவு பரிமாற்றமா? முடிவுக்கு வருவதால் பறக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டு
புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் கடந்த 2016 ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டு அதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது.
புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 3 வங்கிகள் மட்டும் சுமார் ரூ.2,650 கோடிக்கான நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் கடந்த 2016 ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாயினர். சில இடங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்றது. மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களில் நேரம் காலம் பாராமல் காத்துக்கிடந்த நினைவுகள் என்றும் மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது. முதியோர்கள் கடும் வெயிலில் காத்துக்கிடந்து மயங்கி விழுந்த சம்பவங்களும் அரங்கேறின.
மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்திற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படி ரூ.2,000 நோட்டுகள் அறிமுகமானாலும் சில்லறை தட்டுப்பாடு தொடங்கி பல விஷயங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது வெகுவாக குறைந்துவிட்டது மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியது.
இப்படியான நிலையில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிலளித்தது. இதனால் மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. முதலில் அப்படி ஒரு திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதற்கான சில காரணங்களை பட்டியலிடப்பட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் அல்லது மாற்றிக் கொள்வதற்கான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 96 சதவிகித பணம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 3 வங்கிகளில் மட்டும் ரூ.2,650 கோடிக்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த மே மாதம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து செப்டம்பர் இறுதி வரை கிட்டதட்ட ரூ.4 ஆயிரம் கோடிக்கு பண மாற்றமானது நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ரூ.1,260 கோடிக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இதேபோல் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் பேங்க் மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் தங்கள் கிளைகளை கொண்டுள்ளது. இவற்றில் ரூ. 1,087 கோடிக்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ரூ.726 கோடிக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும், சமீபத்தில் ரூ.9 ஆயிரம் கோடியை தவறுதலாக பணபரிவர்த்தனை செய்து சர்ச்சையில் சிக்கிய தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் ரூ. 693 கோடிக்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டும், பண பரிமாற்றம் செய்யப்படுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: Rs. 2000 Notes: 2000 ரூபாயை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு