RBI On Minimum Balance: வங்கிகளுக்கு வந்த கட்டுப்பாடு - இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் கிடையாது - ஆர்பிஐ அதிரடி
RBI On Minimum Balance: செயலற்ற வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என, இனி அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
செயலற்ற வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக, இனி அபராதக் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதோடு, செயலற்ற கணக்குகளை செயல்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, 2 ஆண்டுகளாக எந்தவித பரிவர்தனைகளும் நடைபெறாமல் இருக்கும் கணக்குகள், செயலற்ற வங்கிக் கணக்குகளாக கருதப்படுகின்றன. அந்தகைய கணக்குகள், தனித்தனி கணக்குப் புத்தகங்களில் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அதன் கீழ் செயல்படும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதோடு, உதவித்தொகை பணம் அல்லது நேரடி பலன் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாவிட்டாலும் செயலற்ற வங்கிக் கணக்காக கருதப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இந்த அறிவுறுத்தல்கள் வங்கி அமைப்பில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் அளவைக் குறைப்பதற்கும், அத்தகைய வைப்புத்தொகையை அவற்றின் உண்மையான உரிமையாளர்கள்/உரிமையாளர்களுக்குத் திருப்பித் தருவதற்கும் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் முயற்சிகளை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு புதிய விதிகளின்படி, வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்குகள் செயலிழந்துவிட்டதை எஸ்எம்எஸ், கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். செயல்படாத கணக்கின் உரிமையாளர் பதிலளிக்காத பட்சத்தில், கணக்கு வைத்திருப்பவரை அறிமுகப்படுத்திய நபர் அல்லது கணக்கு வைத்திருப்பவரின் நியமனதாரர்களை தொடர்பு கொள்ளுமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டதால், கணக்குகளில் இருப்புத்தொகையானது மைனஸ் ஆக மாறாமல் பார்த்துக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும், வங்கிகள் தொடர்ந்து அபராதக் கட்டணங்களை விதித்த நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளில் இருப்புத்தொகை:
சமீபத்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, உரிமை கோரப்படாத டெபாசிட்கள் மார்ச் 2023 இன் இறுதியில் ரூ. 32,934 கோடியிலிருந்து 28% அதிகரித்து ரூ.42,272 கோடியாக உள்ளது.10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல்படாத டெபாசிட் கணக்குகளில் உள்ள ஏதேனும் இருப்பு, ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் வைப்பாளர் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிதிக்கு வங்கிகளால் மாற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிகள் எப்போது அமலுக்கு வரும்?
புதிய விதிகளின்படி, 'செயல்படாத கணக்கு என வகைப்படுத்தப்பட்ட எந்தக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக அபராதக் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. செயலற்ற கணக்குகளை செயல்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.