Cardless Cash Withdrawal: ஏடிஎம் கார்டு இல்லாமலே இனி யுபிஐ மூலம் பணமெடுக்கலாம்… எல்லா வங்கிகளிலும் கிடைக்க ஆர்பிஐ வழிவகை!
வங்கிக்கு வெளியே பணப்பரிமாற்றம் என்றால், அது ஏடிஎம் கார்டு மூலமாக மிகப்பெரிய அளவில் செய்யப்படுகின்றது. இத்தகைய பரிமாற்றத்தில் தான் ரிசர்வ் வங்கி இந்த மிகப்பெரிய திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ஏடிஎம் மெஷினில் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே, பணம் எடும் வசதி விரைவில் நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்த ரெப்போ விகிதம் பற்றிய அறிவிப்பானது, எதிர்பார்த்தது போலவே மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அது வழக்கம்போல 4 சதவீதமாகவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக அதிகரிப்பு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகள் வைத்துள்ள வைப்புத் தொகைக்கு ஆர்பிஐ தரும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 %-லிருந்து 3.75 சதவீதமாக உயரும் எனவும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்ததுடன் இந்த நிதியாண்டு பணவீக்கம் 5.7 % அதிகரிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார். மேலும், கணிப்பின் அடிப்படையில் இந்த நிதியாண்டில்(2022-23) ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்றைய கூட்டத்தில் மற்றொரு முக்கிய அறிவிப்பினையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலேயே அனைத்து மெஷின்களிலும் பணம் எடுக்கும் வசதியினை விரைவில் கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் வங்கிக்கு வெளியே பணப்பரிமாற்றம் என்றால், அது ஏடிஎம் கார்டு மூலமாக மிகப்பெரிய அளவில் செய்யப்படுகின்றது. இத்தகைய பரிமாற்றத்தில் தான் ரிசர்வ் வங்கி இந்த மிகப்பெரிய திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. ஏற்கனவே சில வங்கிகளிலும் ஏடிஎம் கார்டு இல்லாமலும் பரிவர்த்தனை செய்து கொள்ளும் திட்டம் உண்டு. எனினும் இதற்காக அந்தந்த வங்கிகளின் ஆப் மூலம் பதிவு செய்த பிறகு செய்ய வேண்டியிருக்கும்.
தற்போது யுபிஐ பேமேண்ட் சேவையானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்த நிலையில் இத்தகைய ஆப்சனை கொண்டு தான் ரிசர்வ் வங்கியானது ஏடிஎம் மெஷின்களிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. இது உண்மையில் மிக உதவிகரமான ஒன்றாகவும் இருக்கும் என்று பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இது மக்கள் டெபிட் கார்டினை அதிகம் பயன்படுத்துவதை குறைக்கும், இதன் மூலம் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியினையும் ஊக்குவிக்கும். யுபிஐ மட்டுமே கார்டு பயன்படுத்துவதை குறைக்க முடியாது எனினும் நிச்சயம் கார்டு பரிவர்த்தனையை கொஞ்சமாவது குறைப்பதற்கு வழிவகுக்கும். இது மக்களின் வசதிக்காக மட்டும் என்பதோடு மட்டும் அல்ல, இது கார்டு குளோனிங், ஸ்கிம்மிங் உள்ளிட்ட மோசடிகளையும் தவிர்க்க பயன்படும். தற்போது சில வங்கிகள் மட்டுமே கார்டு இல்லா பரிவர்த்தனையை கொடுத்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் அனைத்து வங்கிகளும், ஏடிஎம் கார்டு இல்லாமல் UPI-ஐ பயன்படுத்தி சேவை பெற்றுக் கொள்ள முடியும்.