Ramoji Rao: காலையிலேயே சோக சம்பவம்.. பிரபல தொழிலதிபர் ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்
ஆந்திராவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக செருகூரி ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஆந்திராவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக செருகூரி ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஹைதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து நானக்ராம்குடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராமோஜி ராவ் இன்று அதிகாலை காலமானார். 87 வயதான ராமோஜி ராவ், சினிமாத்துறையின் மிகப்பெரிய பிலிம் சிட்டியான ஹைதாராபாத் ராமோஜி ராவின் உரிமையாளர் ஆவார். அதுமட்டுமல்லாமல் ஊடகத்துறையில் இவரது பங்கு மகத்தானது. ஈநாடு நியூஸ் பேப்பர், ஈ டிவி நெட்வொர்க் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனமான உஷா கிரண் மூவிஸ் என பல துறைகளிலும் மிக முக்கியமான நபராக வலம் வந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடியில் விவசாய குடும்பத்தில் பிறந்த செருகூரி ராமோஜி ராவ், மார்கதர்சி சிட் ஃபண்ட்,ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி,ஹோட்டல் டால்பின் குரூப் ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார்.
ராமோஜி ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உடல்நலம் பெற வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதாக கூறினர். இதய கோளாறுகளுடன் மூச்சு விடுவதிலும் ராமோஜி ராவுக்கு சிரமம் இருந்ததால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனிடையே இன்று அதிகாலை 3.45 மணியளவில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. ராமோஜி ராவ் மறைவுக்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தை சிறப்பாக கணித்து அதன்மூலம் தொழில்களில் வெற்றி பெற்று சாதனையாளராக திகழ்ந்த ராமோஜி ராவ், ஆந்திராவில் உள்ள அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.