SBI Amrit Kalash: அடடே..! எஸ்பிஐயின் அமிர்த கலச எஃப்டி திட்டம் நீட்டிப்பு - ரிஸ்க் இன்றி நல்ல வருமானம் ஈட்ட வழி
SBI Amrit Kalash Date Extend: எஸ்பிஐ வங்கியின் அமிர்த கலசம் எனப்படும், நிலையான வைப்புத்தொகை திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
SBI Amrit Kalash Date Extend: எஸ்பிஐ வங்கியின் அமிர்த கலசம் எனப்படும், நிலையான வைப்புத்தொகை திட்டத்திற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமிர்த கலச எஃப்டி திட்டத்திற்கான அவகாசம்
நிலையான வைப்புத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடு மற்றும் சிறந்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்கள் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் மற்றும் அதன் மீதான வட்டி வருமானமும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலீடு செய்கின்றனர். அதன்படி, முதலீடு செய்ய, அவர்கள் பெரும்பாலும் FD திட்டங்கள் மீது கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் 400 நாள் சிறப்பு எஃப்டி திட்டம் மிகவும் பிரபலமானது. அமிர்த கலச எஃப்டி எனப்படும் இந்த திட்டத்திற்கான அவகாசம் கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், அந்த திட்டத்தை மார்ச் 31, 2025 வரை நீட்டித்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் பலன்:
எஸ்பிஐயின் அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டம் என்பது, 400 நாட்களுக்கான சிறப்பு எஃப்டி திட்டமாகும் (400 நாட்கள் எஃப்டி திட்டம்). இதில் 7.10 சதவிகித வலுவான வட்டி விகிதம் பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் மூத்த குடிமக்கள் இதில் இன்னும் அதிகமாகப் பயனடைகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கான வட்டி விகிதம் 0.50 சதவிகிதம் கூடுதலாக அதாவது 7.60 சதவிகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலக்கெடு நீட்டிப்பு?
அமிர்த கலச திட்டத்தை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியதில் இருந்து பிரபலமானதாக உள்ளது. இதில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த 400 நாள் FD திட்டத்தின் பிரபலத்தை கருத்தில் கொண்டு, வங்கி அதன் காலக்கெடுவை பலமுறை நீட்டிக்க வேண்டியிருந்தது. இது முதலில் ஏப்ரல் 12, 2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அதன் காலக்கெடு ஜூன் 23, 2023 என நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு, இது டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் அது மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சிறப்பு FD திட்டத்தின் கடைசி தேதி செப்டம்பர் 30, 2024 ஆக இருந்த நிலையில், இப்போது இந்தத் திட்டத்தின் பலனை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை பெறலாம்.
வட்டி வருமானம்
பொது முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால், அவர்கள் ஆண்டுக்கு ரூ.7,100 வட்டியாகப் பெறுவார்கள். அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,600 வட்டி கிடைக்கும். இந்த திட்டம் 400 நாட்களில் முதிர்ச்சியடையும். அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் 400 நாட்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். அம்ரித் கலாஷ் ஸ்பெஷல் எஃப்டியில் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். ஒரு முதலீட்டாளர் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், அவர் ஆண்டுக்கு ரூ.71,000 வட்டியாக சம்பாதிப்பார், அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.5,916 வருமானம். மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.6,333 கூடுதலாகப் பெறலாம்.
வட்டித் தொகையை எப்போது எடுக்கலாம்:
அம்ரித் கலாஷ் திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் வட்டி பெறலாம். இந்த சிறப்பு FD வைப்புத்தொகைக்கான முதிர்வு வட்டி டிடிஎஸ் கழித்த பிறகு வாடிக்கையாளரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் பொருந்தக்கூடிய விகிதத்தில் TDS விதிக்கப்படும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, எஸ்பிஐயின் யோனோ வங்கிச் செயலியைப் பயன்படுத்தலாம். இது தவிர, வங்கி கிளையை நேரடியாக அணுகியும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.