Oyo Layoff: 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறதா OYO...? என்ன காரணம் தெரியுமா..?
சுமார் 3 ஆயிரத்து 700 பணியாளர்கள் கொண்ட தளத்தில் 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை மற்றும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஓயோ நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கொரோனாவுக்குப் பின்னர் உலகில் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ள சூழலில் சமீபகாலமாக பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஓயோவிலும் லே ஆஃப்:
முன்னதாக ட்விட்டர், பேஸ்புக், மெட்டா, அமேசான் இந்தியாவில் பைஜூஸ் என பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. அந்த வகையில் தற்போது ஓயோ நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதுடன் 250 ஊழியர்களை புதிதாக பணியமர்த்த முடிவு செய்துள்ளது.
முன்னதாக கொரோனா காலத்தில் பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் பல முக்கிய நகரங்களில் இருக்கும் அலுவலகத்தை நிரந்தரமாக மூடி செலவுகளைப் பெரிய அளவில் குறைத்தது.
செலவு குறைப்பு நடவடிக்கை:
ஓயோ குழுமம் தனது நிறுவனத்தின் பல்வேறு குழுக்களை ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ள நிலையில், ஆட்குறைப்பிலும் ஈடுபட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புக் குழுக்களைச் சேர்ந்த 600 ஊழியர்களை முதற்கட்டமாக வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் விற்பனைக் குழுவில் 250 நிர்வாகிகளை புதிதாக பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இது குறித்து முன்னதாக ஓயோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செலவு குறைப்பு நடவடிக்கையாக ஓயோ அதன் தயாரிப்பு, பொறியியல், கார்ப்பரேட் தலைமையகம், ஓயோ வகேஷன் ஹோம் குழு ஆகியவற்றில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சுமார் 3700 பணியாளர்கள் கொண்ட எங்கள் தளத்தில் 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளோம்.
அதன்படி தற்சமயம் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்து உறுப்பினர்களை புதிதாக பணியமர்த்த உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 IMPORTANT: OYO Lays Off 600 Employees From Tech Roles
— Debarghya Sil (@debarghyawrites) December 3, 2022
- Engineering & Product Team Impacted
- Will add 250 CRM & BD roles
- It laid off 300 employees in 2020
Break by @Inc42
உக்ரைன் போர் காரணமாகவும் உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்பி 12 விழுக்காடு ஊழியர்கள் அதாவது சுமார் ஆறாயிரம் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.