கோகோ கோலா, பெப்சி காலி.. களத்தில் இறங்கும் அம்பானி.. மெகா திட்டமா இருக்கே!
அதிரடியான விலை குறைப்பு, சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக லாபம் போன்ற உத்திகள் வழியாக கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களுக்கு சவால் அளிக்க காத்திருக்கிறது கேம்பா கோலா நிறுவனம்.
துவண்டு கிடக்கும் கேம்பா கோலா நிறுவனத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியுள்ளது. இதற்காக, முகேஷ் அம்பானி மெகா திட்டத்தை வகுத்து வருகிறார். கேம்பா கோலா நிறுவனம், இந்தியாவில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமாக விளங்கியது .
கடந்த 2022ஆம் ஆண்டு, 22 கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானி வாங்கினார். இப்படிப்பட்ட சூழலில், கோகோ கோலா, பெப்சி போன்ற பெரு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் புதிய வியூகத்துடன் குளிர்பான சந்தையில் இறங்க உள்ளது கேம்பா கோலா நிறுவனம்.
கேம்பா கோலா நிறுவனத்தின் வரலாறு:
கடந்த 1970களில், மோகன் சிங்கால் தொடங்கப்பட்ட ப்யூர் டிரிங்க்ஸ் குழுமத்திற்கு சொந்தமானதே கேம்பா கோலா நிறுவனமாகும். குறிப்பாக, 1970கள் மற்றும் 1980களில் இந்த பிராண்ட் அங்கீகாரம் பெற்று, அனைவருக்கும் பரிச்சயமான குளிர்பானமாக மாறியது.
1990களின் முற்பகுதியில் கொண்டு வரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைகள், இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டன. இந்திய சந்தையை பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள், ஆதிக்கம் செலுத்த தொடங்கியதை அடுத்து, காம்பா கோலாவின் வீழ்ச்சி தொடங்கியது.
2000-2001 வாக்கில், காம்பா கோலாவின் ஆலைகள் மூடப்பட்டன. 2009 வாக்கில், ஹரியானாவில் மட்டுமே தயாரிக்கும் ஒரு குளிர்பானமாக காம்பா கோலா மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், காம்பா கோலாவை 22 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
அம்பானியின் பிளான் என்ன?
Campa பிராண்டை மீண்டும் தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடக்ஸ் லிமிடெட் (RCPL), கடந்த 2023 ஆம் ஆண்டு, மார்ச் 9ஆம் தேதி அறிவித்தது. தன்னுடைய விநியோக நெட்வொர்க் மற்றும் நிதி ஆதாரங்கள் வழியாக குளிர்பான சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி கேம்பா கோலா நிறுவனத்தை நிலைநிறுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டு வருகிறது.
அதிரடியான விலை குறைப்பு, சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக லாபம் போன்ற உத்திகளை கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், குளிர்பான சந்தையை தலைகீழாக திருப்பி போட திட்டமிட்டு வருகிறது.
ரிலையன்ஸின் நிதி வலிமையும் விநியோகத் திறன்களும் கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்க போவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உற்பத்தியை விரைவாக அதிகரித்து, தனித்துவமான விளம்பர உத்திகள் வழியாக குளிர்பான சந்தையை கேம்பா கோலா நிறுவனத்தால் மாற்றி அமைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.