Mukesh Ambani Resigns:முகேஷ் அம்பானி ராஜினாமா... ஜியோ தலைவரான மகன் ஆகாஷ் அம்பானி
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி ஜியோ இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். முகேஷ் அம்பானிக்கு பதிலாக அவரது மகன் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவனத் தலைவராக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Billionaire Mukesh Ambani resigns from board of Reliance Jio; son Akash made chairman: Co filing
— Press Trust of India (@PTI_News) June 28, 2022
ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் அறிவிப்பு
முன்னதாக, நேற்று (ஜூன் 27) நடைபெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் கூட்டம் ஒன்றில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக ஆகாஷ் அம்பானியை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆகாஷ் அம்பானி தவிர அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரமீந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி.சௌத்ரி ஆகியோர் கூடுதல் இயக்குநர்களாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
’அப்பாவின் உத்வேகம் பிள்ளைகளிடம் தெரிகிறது...’
ரிலையன்ஸ் குழுமத்தில் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக தனது பிள்ளைகள் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொள்வர்கள் என சென்ற 2021ஆம் ஆண்டு முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான தனது தந்தை திருபாய் அம்பானியின் அதே ஆற்றலையும் உத்வேகத்தையும் தனது குழந்தைகளிடம் காண முடியும் என முகேஷ் அம்பானி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் ஹுருன் நிறுவனம் (Hurun Global Rich List 2022) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரே தொழிலதிபராக ரிலையன்ஸ் நிறுவனத்தின் (Reliance Industries) தலைவர் முகேஷ் அம்பானி ( Mukesh Ambani) இடம்பெற்றார்.
உலக பணக்காரர்கள் பட்டியல்
2022 ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம், எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் முகேஷ் அம்பானி சொத்துமதிப்பு கடந்த ஆண்டைவிட 24% உயர்ந்து சுமார் ரூ.7.7 லட்சம் கோடி (103 பில்லியன் டாலர்) மதிப்புடன் 9ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பணக்காரர் பட்டியலில் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான எல்.வி.எம்.எச்., சி.இ.ஓ., பெர்னார்ட் அர்னால்ட் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.
முகேஷ் அம்பானிக்கு அடுத்து இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடம் வகிக்கிறார்.