Mensa Brands | ஆறு மாதங்களில் யுனிகார்ன் நிலையை அடைந்த `மென்சா பிராண்ட்ஸ்’
மென்சா என்றால் கிரேக்க மொழிகளில் விண்மீன் கூட்டம் என்று பொருள். அதுபோல பேஷன் துறையில் உள்ள பலவிதமான பிராண்ட்களை இந்த நிறுவனம் இணைத்து வருகிறது.
மிக குறுகிய காலத்தில் யுனிகார்ன் நிலையை அடைந்த நிறுவனமாக மென்சா பிராண்ட்ஸ் உருவாகி இருக்கிறது. மென்சா என்றால் கிரேக்க மொழிகளில் விண்மீன் கூட்டம் என்று பொருள். அதுபோல பேஷன் துறையில் உள்ள பலவிதமான பிராண்ட்களை இந்த நிறுவனம் இணைத்து வருகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு செயல்பாட்டினை தொடங்கிய நிறுவனம் சமீபத்திய நிதி திரட்டல் காரணமாக 1 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு 135 மில்லியன் டாலர் நிதியை திரட்டியது. முன்னாதாக சில மாதங்களுக்கு முன்பு 300 கோடி டாலர் அளவுக்கு (பங்குகள் மற்றும் கடன் இரண்டும் சேர்த்து) நிதி திரட்டியது. ஆக்செல் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல், நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன. மேலும் அல்ட்ரியா கேபிடல், இன்னொவென் கேபிடல், ஸ்டிரைட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து கடன் மூலமாகவும் நிதி திரட்டி இருக்கிறது.
அனந்த் நாராயணன்
மெக்கென்ஸி நிறுவனததில் பணியாற்றியவர் அனந்த் நாராயணன். இவர் எகனாமிக் டைம்ஸ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் கலந்துகொள்கிறார்கள். அப்போது கிடைத்த அறிமுகம் காரணமாக பிளிப்கார்ட் குழுமத்தின் பேஷன் பிராண்டான மிந்திராவின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மிந்திரா நிறுவனத்தில் இருந்து விலகி, மெட்லைப் நிறுவனத்தில் நிறுவனராக 2019-ம் ஆண்டு இணைந்தார். இந்த நிறுவனத்தை பார்ம் ஈஸி நிறுவனம் வாங்கியது. அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் மென்சா பிராண்ட் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்
மென்சா பிராண்ட்
விண்மீன் கூட்டம் போல ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. பர்சனல் கேர், பியூட்டி மற்றும் ஆடைகள் பிரிவில் செயல்படும் 12 பிராண்ட்களில் பெரும்பான்மையான பங்குகளை மென்சா வாங்கி இருக்கிறது. இந்த பிராண்டுகள் ஏற்கெனவெ பெரும் வெற்றி அடைந்த பிராண்ட்கள், லாபம் ஈட்டும் பிராண்ட்கள் மற்றும் ஆண்டுக்கு 100 சதவீதம் வளர்ச்சி அடைந்த பிராண்ட்கள். இந்த அனைத்து பிராண்டுகளும் ஒன்றாக இணையும்போது சர்வதேச அளவில் முக்கியமான பிராண்டாக மாறும் என்பது மென்சாவின் திட்டம்.
கராகிரி, பிரியாசி, டென்னிஸ் லின்கோ உள்ளிட்ட 12 பிராண்ட்களில் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பங்குகளை மென்சா வாங்கி இருக்கிறது. மேலும் 20-க்கும் மேற்பட்ட இந்திய ரீடெய்ல் பிராண்டுகளிடம் மென்சா பேசி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த Thrasio என்னும் நிறுவனம் 2018-ம் ஆண்டு இந்த பிஸினஸ் மாடலை உருவாக்கியது. இந்த நிறுவனம் இந்தியாவில் இதேபோன்ற செயல்பாட்டை தொடங்க இருக்கும் சூழலில் மென்சா பிராண்ட் உருவாகி இருக்கிறது.
பிராண்டுகளை வாங்குவது மட்டும் எங்கள் வேலை, டெக்னாலஜி உதவியுடன் சர்வதேச அளவிலான பிராண்டாக எடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம் என அனந்த நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
திரட்டப்படும் நிதியில் பெரும்பாலும் 80 சதவீதத்துக்கு மேல் பிராண்ட்களை இணைப்பதற்கே செலவு செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சராசரியாக ஒரு பிராண்டுக்கு 5 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய இருக்கிறது.
இதுவரை தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை அடைவதற்கு சராசரியாக ஆண்டுகள் தேவைப்பட்டன. சமீபத்தில் யுனிகார்ன் நிலையை அடைந்த அப்னா 21 மாதங்களில் யுனிகார்ன் நிலையை தொட்டது. ஆனால் மென்சா ஆறு மாதங்களில் இந்த நிலையை எட்டியது. இந்த நிறுவனத்தின் மீதும் அதன் பிஸினஸ் மாடல் மீதும் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம் என ஸ்டார்ட் அப் உலகினர் தெரிவிக்கின்றனர்.