ரூ.100-க்கு தங்கம்... திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரபல நகைக்கடைகள்.. விபரங்கள் இதோ!
இந்தியாவில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ள சூழலில், நகை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்தச் சூழலில் நகைக்கடைகள் தற்போது இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
கொரோனாவிற்கு பிறகு தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில் 100 ரூபாய் முதல் நகை வாங்கும் திட்டங்களை நகைக் கடைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று மற்றும் தேசிய அளவிலான ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக தங்கம் விற்பனை பெருமளவில் சரிந்தது. அதனைத் தொடர்ந்து ஆன்லைனில் தங்கம் வாங்குவது அதிகரிக்கத் தொடங்கியது. தனிஷ்க், கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற பெரிய நகைக்கடைகள் தங்களின் சொந்த இணையதள பக்கங்கள் வழியாகவும், தங்கம் விற்பனை செய்யும் டிஜிட்டல் தளங்களோடு டை-அப் வைத்துக்கொண்டும் 100 ரூபாய் முதல் நகை வாங்கும் திட்டங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளன. குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கான பணத்தை செலுத்திய பின்னர் அவை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஆன்லைனில் தங்க விற்பனை இந்தியாவுக்கு புதிதான ஒன்று கிடையாது. ஆக்மண்ட் போன்ற தளங்களில் ஏற்கெனவே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பாரம்பரிய நகைக் கடைகள் தங்களது வாடிக்கையாளர்கள் நேரடியாக கடைக்குப் போய் வாங்குவதை விரும்பிய நிலையில் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டத்திலிருந்து விலகியே இருந்தனர். கொரோனா நிச்சயமாக பெரும்பாலான நகைவிற்பனையாளர்களின் மனதை மாற்றிவிட்டது. அவர்கள் ஆன்லைனில் நகை விற்பனைக்கு தற்போது முனைப்புக் காட்டி வருகின்றனர் என்கிறார் 4000 நகைக்கடைகளை பார்ட்னர்களாகக் கொண்ட ஆக்மண்ட் கோல்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேத்தன் கோத்தாரி.
இந்தியாவில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ள சூழலில், நகை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்தச் சூழலில் நகைக்கடைகள் தற்போது இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.தங்கத்தை ஆன்லைனில் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், குறிப்பாக அதிகப்படியான இளைஞர்கள் ஆன்லைனில் வாங்குவதை விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் கல்யாண் ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் கல்யாணராமன்.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தங்களது இணையதளங்களில் தங்க காயின் போன்றவற்றை வாங்குவோரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆக்மண்ட் கோல்டை சேர்ந்த கோத்தாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பண்டிகை காலத்தில் அது இன்னும் 20-30 சதவீதம் வரை அதிகரிக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே தங்கத்தின் விலையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. கொரோனா காலம் முழுக்க ஊரடங்கு மற்றும் தொற்று பரவும் அபாயத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் பல பொருட்களை ஆன்லைனிலேயே வாங்க பழகிவிட்டனர். அதன் அடுத்தக்கட்டம்தான் ஆன்லைனில் தங்கம் வாங்கும் மனநிலையும் என்கிறார்கள் நகை விற்பனையாளர்கள். இதனையடுத்து தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், 100 ரூபாய்க்கான நகை வாங்கும் திட்டம் போன்றவற்றையும் அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள் என கூறப்படுகிறது.