INDIAS RICHEST: இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.65 லட்சம் கோடி.. பெரும் பணக்காரர்களில் அதானி முதலிடம்
இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் 10 பேரின் சொத்து மதிப்பு மட்டுமே, ரூ.31 லட்சம் கோடி என ஃபோர்ப்ஸ் இதழின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஃபோர்ப்ஸ் பட்டியல்:
2023 ஆம் ஆண்டு உலக அளவில் மந்தநிலையாகத் தோன்றினாலும், சர்வதேச நாணய நிதியத்தின்படி, இந்தியாவில் உள்ள செல்வந்தர்களுக்கு அது பலனை அளிக்கும் ஆண்டாக இருக்கும் என ஃபோர்ப்ஸின் 2022 பட்டியல் வெளிப்படுத்துகிறது. உலகளவில் பணவீக்க கவலைகளுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பு சரிவு கவலைகளை ஏற்படுத்தியபோதும், இந்தியாவின் பழைய மற்றும் புதிய செல்வந்தர்கள் வளர்ச்சியையே கண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் மட்டுமே, நாட்டின் பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துக்களில் சுமார் 30 சதவீதத்தை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் 100 பணக்காரர்கள் 2022 ஃபோர்ப்ஸ் பட்டியல்:
இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு அதிகரித்து ரூ.65 லட்சம் கோடியை கடந்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட சர்வதேச அளவிலான தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றியதால் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.31 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் அதானி:
தொழிலதிபர் கவுதம் அதானி 2021ம் ஆண்டு தனது சொத்து மதிப்பை 3 மடங்கு உயர்த்தியதோடு, படிப்படியாக வளர்ந்து நாட்டின் பெரு பணக்காரராகவும் உருவெடுத்தார். குஜராத்தின் முந்த்ராவில் நாட்டின் மிகப்பெரிய துறைமுகத்தை வைத்திருக்கும் அதானியின் நடப்பு ஆண்டு சொத்து மதிப்பு ரூ.12.24 லட்சம் கோடி எனவும், உலகின் இரண்டாவது பெரும் பணக்காரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.8 லட்சம் கோடியை தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்ய உள்ளதாகவும், அதில் 70% பசுமை ஆற்றலுக்கான முதலீடாக இருக்கும் எனவும் அம்பானி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் பணக்காரர்கள் பட்டியல்:
கடந்த ஆண்டு தனது தொழிலில் 5% இழப்பை சந்தித்த ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானி ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி ரூ.2.25 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அதைதொடர்ந்து, சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ், ஜின்டால் குரூப் நிறுவனத்தின் சாவித்ரி ஜின்டால், ஆனந்த் மகேந்திரா ஆகியோர் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலின் 10வது இடத்தில் பஜாஜ் குழுமம் உள்ளது.
பட்டியலில் இணைந்த புதிய பணக்காரர்கள்:
அழகு மற்றும் ஃபேஷன் சில்லறை விற்பனையாளரான ஃபால்குனி நாயர், தனது நிறுவனமன் நைக்காவைப் பட்டியலிட்டு இந்தியாவின் பணக்கார பெண்மணியாக உருவெடுத்துள்ளார். ஆடை தயாரிப்பாளர் ரவி மோடி, கடந்த டிசம்பரில் மெட்ரோ பிராண்ட்களை பட்டியலிட்ட ஷூ தயாரிப்பாளர் ரஃபிக் மாலிக் ஆகியோரும், புதியதாக இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.