Share Market: அப்படி போடு..! இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் - சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம்
Stock Market: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வரலாற்றில் முதல்முறையாக 75 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
![Share Market: அப்படி போடு..! இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் - சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் Indian stock markets hit new highs - Sensex trades above 75,000 points Share Market: அப்படி போடு..! இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் - சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/bb279d4231571edd6da35ae1057cf2b01716455462430732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Stock Market: இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் அதிகரித்து 75 ஆயிரத்து 201 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சென்செக்ஸ் குறியீடு 75 ஆயிரம் புள்ளிகளை கடப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கடந்த ஓராண்டில் நிஃப்டி 24 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 300 புள்ளிகள் அதிகரித்து 22 ஆயிரத்து 933 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் மூலம் முன்னதாக அதிகபட்சமாக இருந்த 22 ஆயிரத்து 794.7 என்ற நிஃப்டி குறியீட்டு எண்ணின் சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு ஏற்றம்:
துறைசார் குறியீடுகளைப் பொறுத்தமட்டில், ஐடி, ஆட்டோ மற்றும் வங்கி ஆகியவை, முறையே 1.3 சதவிகிதம், 1.2 சதவிகிதம் மற்றும் 1.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 5.6 சதவிகிதமும், ஆக்சிஸ் பேங்க் பங்குகள் 3.6 சதவிகிதமும் இன்று ஏற்றம் கண்டுள்ளன. அதைதொடர்ந்து, எல்&டி, அதானி போர்ட்ஸ் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவற்றின் பங்குகள் முறையே, 2.99 சதவிகிதம், 2.35 சதவிகிதம் மற்றும் 2.30 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளன. அதேநேரம், சன் பார்மா மற்றும் பவர் கிரிட் ஆகியவை முறயே 3.19 சதவிகிதம் மற்றும் 2.84 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளன. ஹிண்டால்கோ, கோல் இந்தியா மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் சரிவை கண்டுள்ளன.
5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்:
இந்தியாவின் சந்தை மூலதனம் கடந்த செவ்வாயன்று, வரலாற்றில் முதன்முறையாக 5-ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மைல்கல்லை எட்டியது. மிதமான உள்நாட்டு சந்தைகள் ஆறு மாதங்களுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான சந்தை மதிப்பைச் சேர்த்தன. இதன் மூலம் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் வரிசையில், 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான சந்தை மூலதனத்தை பெற்ற ஐந்தாவது நாடு/பிராந்தியமாக இந்தியா உருவெடுத்தது. இது இந்திய முதலீட்டாளர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி பெருமிதம்:
இந்திய பங்குச்சந்தையின் மூலதன மதிப்பு, முதல்முறையாக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது தொடர்பாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து இருந்தார். அதோடு, ” பாஜக பதவியேற்றபோது, சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை எட்டியது. தற்போது அது சுமார் 75,000 புள்ளிகளில் உள்ளது. இது ஒரு வரலாற்று உயர்வை பிரதிபலிக்கிறது. சமீபத்தில், முதன்முறையாக 5 ட்ரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை எட்டினோம் ஆனால், அது போதாது. ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில், பாஜக சாதனை எண்ணிக்கையைத் தொடும் போது, இந்திய 0பங்குச் சந்தையும் புதிய சாதனைகளை எட்டும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)