India GDP Growth: எதிர்பார்ப்புகளை தாண்டி..! 3வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.4% எட்டி அசத்தல் - மத்திய அரசு
India GDP Growth: நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4 சதவிகிதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
India GDP Growth: நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட, அதிக வளர்ச்சி கண்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஜிடிபி 8.4% வளர்ச்சி:
இந்தியாவின் பொருளாதாரத்தை குறிக்கும் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4 சதவிகிதமாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி ஆனது, 4.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிலையான (2011-12) விலையில் ஜிடிபி ரூ 43.72 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ 40.35 லட்சம் கோடியாக இருந்தது. இதன்மூலம் 8.4 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புகளை தாண்டி..!
கட்டுமானத் துறையின் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் (10.7 சதவிகிதம்), அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் நல்ல வளர்ச்சி விகிதம் (8.5 சதவிகிதம்) ஆகியவை நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சியை உயர்த்தியுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருந்த நிலையில், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக விரிவடைந்து வருவதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன. 2022-23 இல் 7.0 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2023-24 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மதிப்பீடான 6.5 சதவிகிதத்தை விட அதிகமாகும். முந்தைய காலாண்டில் இது 7.6 சதவிகிதமாகவும், ஜூலை காலாண்டில் 7.8 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புதன்கிழமை, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) பொருளாதார நிபுணர் ஒருவர் பேசுகையில், 2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7-6.9 சதவீதத்திற்குள் விரிவடையும் என கணித்ததும் தவறாகியுள்ளது.
வளரும் பொருளாதாரம்:
அரசின் அறிக்கையின்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சியை முந்தைய மதிப்பீட்டான 7.2 சதவிகிதத்திற்கு எதிராக 7 சதவிகிதமாக மாற்றியது. 2023-24 ஆம் ஆண்டில் தற்போதைய விலையில் பெயரளவு ஜிடிபி அல்லது ஜிடிபி ரூ.293.90 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23ல் ரூ.269.50 லட்சம் கோடியாக இருந்தது, இதன் மூலம் வளர்ச்சியானது 9.1 சதவிகிதத்தை காட்டுகிறது. மறுபுறம், ஜனவரி 2023 இன் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, ஜனவரி 2024 இல் எட்டு முக்கிய தொழில்களின் (ஐசிஐ) ஒருங்கிணைந்த குறியீடு 3.6 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. அதன்படி, நிலக்கரி, எஃகு, சிமெண்ட், இயற்கை எரிவாயு, மின்சாரம் மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி ஜனவரி 2024 இல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.