Stock Market: போலி முதலீட்டு ஆலோசகரை கண்டுபிடிப்பது எப்படி? இப்படித்தான்!
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக உங்களை அணுகும் போலி முதலீட்டு ஆலோசகரை கண்டுபிடிப்பது எப்படி? என்பதை கீழே காணலாம்.

இணைய வளர்ச்சிக்குப் பிறகு மக்கள் பங்குச்சந்தை, கிரிப்டோகரன்சி ஆகியவற்றில் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி சில மோசடி பேர்வழிகள் மக்களிடம் பணம் பறிப்பதும் அரங்கேறி வருகிறது.
முதலீட்டு ஆலோசகர்:
சிலர் தங்களை முதலீட்டு ஆலோசகர் என்று அறிமுகமாகி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் மக்களிடம் பணத்தை பறிப்பதும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் போலி முதலீட்டு ஆலோசகர் யார்? என்பதை எவ்வாறு அடையாளம் கண்டுபிடிப்பது என்பதை கீழே காணலாம்.
போலி முதலீட்டு ஆலோசகரை அடையாளம் காண்பது எப்படி?
முதலீட்டு ஆலோசகரிடம் அதற்கான கல்வித்தகுதி, சான்றிதழ் மற்றும் மூலதன சான்றிதழ்கள் இருக்கும். நீங்கள் கேட்கும்போது அதைத் தர மறுத்தால் அவர் போலி முதலீட்டு ஆலோசகராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
தங்களிடம் முதலீடு செய்தால் நிர்ணயிக்கப்பட்ட அல்லது நிலையான வருமானத்தை வழங்கும் என்று கூறினால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் போலியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
உங்களிடம் எந்தவித ஆவணங்களும் வழங்காமல், அத்தாட்சி இல்லாமல் முன்பணம் அல்லது பெரிய கட்டணங்களை கொடுக்குமாறு ஒருவர் கூறினால் அவர் போலி முதலீட்டு ஆலோசகராக இருக்க வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். அவரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
நீங்கள் நேரில் அறிந்திடாமல் சமூக வலைதளங்கள் வழியாக வந்து உங்களைத் தொடர்பு கொண்டால் மிக கூடுதல் கவனம் தேவை.
மேலே கூறியவற்றை போலி முதலீட்டு ஆலோசகர்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தும் வழிமுறைகள் ஆகும்.
உண்மையான நபரை கண்டுபிடிப்பது எப்படி?
செபியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். www.sebi.gov.in என்பது செபியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும்.
அந்த இணையதளத்தில் intermediaries market infrastructure institutions என்பதை தேர்வு செய்யவும்.
அதில் Recognised Intermediaries என்பதைத் தேர்வு செய்யவும்.
அதில் பதிவு செய்யப்பட்ட ஸ்டாக் ப்ரோக்கர், மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்கள் உள்ளிட்ட பலரின் பட்டியலும் இருக்கும்.
அதில் Investment Adviser என்பதை கிளிக் செய்யவும்.
அதில் பெயர், ட்ரேட் பெயர், பதிவு எண், தொடர்பு கொள்ளும் நபர், மின்னஞ்சல் முகவரி, முகவரி ஆகியவை இருக்கும்.
அதில் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் முதலீட்டு ஆலோசகரின் விவரங்களை பதிவு செய்து தேடினால் அவரது செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் இருக்கும்.
அதில் பதிவு செய்யாத முதலீட்டு ஆலோசகர் உங்களைத் தொடர்பு கொண்டால் அவரிடம் இருந்து விலகியிருப்பதும், அவர்களை நம்பி பணம் முதலீடு செய்யாமல் இருப்பதுமே சிறப்பு ஆகும்.
உண்மையான முதலீட்டு ஆலோசகர் எப்படி நடந்து கொள்வார்?
செபியின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டவராக இருப்பார்.
கல்வித்தகுதி சான்றிதழ், மூலதனச் சான்றிதழ்களை வைத்திருப்பார்.
நீங்கள் மேற்கொள்ள விரும்பும் திட்டங்களில் உள்ள அபாயங்கள், சறுக்கல்கள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை செய்வார். மேலும், வட்டி விகிதங்கள் குறித்த முழு விவரத்தையும் அளிப்பார்.
ஒவ்வொரு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள், நன்மைகள், ஆபத்துகள் ஆகியவற்றையும் தெளிவாக எடுத்துரைப்பார்.
மேலே கூறியவற்றிற்கு முரண்பட்டவாறு ஒருவர் உங்களை முதலீட்டு ஆலோசகர் என்று அணுகினால் அவர் போலி என்பதை அறிந்து கொள்ள முடியும்.





















