GST Revenue: மார்ச்சில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ 1.60 லட்சம் கோடி.. ஆண்டுக்கு ரூ.18 லட்சம் கோடி..! தமிழ்நாட்டில் எவ்வளவு?
GST Revenue 2022-23:மொத்த ஜி.எஸ்.டி வருவாயானது கடந்த ஆண்டை விட 22% அதிகமாக வசூலாகியுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.9,245 கோடி வசூலாகியுள்ளது
மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டு நிறைவு பெற்ற நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
- மார்ச் மாதம் 2023-ல் சரக்கு மற்றும் சேவை ( ஜிஎஸ்டி ) வரி வருவாய் - ரூ.1,60,122 கோடி
- 2022-23க்கான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.18.10 லட்சம் கோடி
- 2022-23ல் மொத்த வருவாய், கடந்த ஆண்டை விட 22% அதிகமாகும்
- 2023 மார்ச்சில் தமிழ்நாட்டில் ரூ.9,245 கோடி வசூலாகியுள்ளது.
ஜி.எஸ்.டி வருவாய்- மார்ச்:
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மொத்த சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ) வருவாய் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடியாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதிலிருந்து 2வது முறையாக ரூ 1.6 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது, 2022 ஏப்ரல் மாத வசூலுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது அதிக வசூல் இதுவாகும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை ( சி-ஜிஎஸ்டி ) வரி ரூ.29 ஆயிரத்து 546 கோடி வசூலாகியுள்ளது, மாநில சரக்கு மற்றும் சேவை ( எஸ்-ஜிஎஸ்டி ) வரி ரூ.37 ஆயிரத்து 314 கோடி வசூலாகியுள்ளது, ஒருங்கிணைந்த ( ஐ-ஜிஎஸ்டி ) வரி ரூ. 82 ஆயிரத்து 907 கோடியாகவும், செஸ் வருவாய் ரூ.10 ஆயிரத்து 355 கோடி வசுலாகியுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ1.5 லட்சம் கோடியைத் தாண்டி, தொடர்ந்து 12 மாதங்களாக மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூல் , ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததிலிருந்து இரண்டாவது அதிகபட்ச வசூலை பதிவு செய்துள்ளது. 2023 மார்ச் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 13% அதிகமாகும்.
ஆண்டு வருவாய்:
2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூலானது ரூ.18.10 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான சராசரி மாத வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாகவும் உள்ளது. மேலும் 2022-23ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாயானது, கடந்த ஆண்டை விட 22% அதிகமாகும் உள்ளது.
தமிழ்நாடு வசூல்:
மாநிலங்களை பொறுத்தவரை 2022-23 ஆம் நிதி ஆண்டில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக ரூ. 22,695 கோடி வசூலாகியது. அதற்கு அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் ரூ.10,360 கோடி வசூலாகியுள்ளது. மூன்றாவதாக குஜராத் மாநிலத்தில் ரூ.9,919 கோடி வசூலாகியுள்ளது. நான்காவதாக, தமிழ்நாட்டில் ரூ.9,245 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழ்நாட்டில் ரூ 8,023 கோடி வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில், கடந்த ஆண்டின் மார்ச் மாத வசூலான ரூ.163 கோடி விட, இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ 204 கோடி வசூல் அதிகரித்துள்ளது.