Gold Rate 3rd April: வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
திரும்ப திரும்ப பேசுற நீ என்ற சினிமா வசனம் போல், மீண்டும் மீண்டும் உயர்ந்து புதிய உச்சங்களை அடைந்து வருகிறது தங்கத்தின் விலை. இன்றைய புதிய உச்ச விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்துவரும் நிலையில், இன்றும்(03.04.25) சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தங்கத்தின் விலை
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான 31-ம் தேதி 67,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து, 8,425 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை எட்டியது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 67,400 என்ற புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்தது தங்கம்.
அன்று மாலையே மீண்டும் கிராமிற்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்த தங்கம் விலை, ஒரு கிராம் 8,450 ரூபாயாகவும், சவரன் 67,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
இந்த நிலையில், 1-ம் தேதி கிராமிற்கு 60 ரூபாய் உயர்ந்து 8,510 என்ற புதிய உச்சத்திலும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 68,080 என்ற புதிய உச்ச விலையிலும் தங்கம் விற்பனையாகிறது. தொடர்ந்து நேற்றும் அதே விலையில் நீடித்த நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்ச விலையை அடைந்த தங்கம்
ஏப்ரல் 3-ம் தேதியான இன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய் உயர்ந்து, 8,560 என்ற புதிய உச்ச விலையை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, 68,480 என்ற புதிய வரலாற்று உச்ச விலையை தங்கம் அடைந்துள்ளது.
இப்படி நாளுக்கு நாள் உயர்ந்துவரும் தங்கத்தின் விலை, பொதுமக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முகூர்த்த நாட்கள் வரும் நிலையில், தங்கத்தின் விலை இப்படி உயர்ந்துகொண்டே போனால், எப்படி வாங்குவது என திருமண வீட்டார் அச்சமடைந்துள்ளனர்.
ஆறுதல் அளித்த வெள்ளியின் விலை
தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில், வெள்ளி விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.
வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 31-ம் தேதி 113 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 1-ம் தேதி கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, 114 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து, நேற்று அதே விலையில் நீடித்த நிலையில், இன்று கிராமிற்கு 2 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி, வெள்ளி இன்று ஒரு கிராம் 112 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

