Diwali Sale : சக்கைப்போடு போடும் தீபாவளி..! 60 முதல் 70 சதவீதம் கூடுதல் விற்பனை..!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம். இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் 60-70% வரை கூடுதலாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்வம் கூட்டும் தீபாவளி:
தொடர் மழை கூட, தமிழகத்தின் கடைவீதிகளில் நடமாடும் கூட்டத்திற்கு தடப்பணை போட முடியவில்லை. அந்தளவுக்கு, அடாது மழை பெய்தாலும் விடாது தீபாவளி பர்சேஸ் நடக்கும் என தெளிவாக முடிவெடுத்துவிட்டனர் தமிழகவாசிகள். அதுவும் கொரோனா தாக்கத்தால், கடந்த இரண்டு தீபாவளி பண்டிகைகளும், கொரோனா தீபாவளியாக வீட்டுக்குள்ளேயே முடங்கி, தொலைக்காட்சிகளுடனும் செல்போன்களுடனும் கொண்டாட்டம் முடிந்துவிட்டது. எனவே, இந்த முறை, எவ்வளவு மழை பெய்து, மழை தீபாவளியாக இருந்தாலும், கொண்டாட்டத்திற்கு குறைவில்லாத தீபாவளியாக மாற்றுவோம் என தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில், தமிழகத்தில் எங்கு நோக்கினும், கூட்டம், கூட்டம், தீப ஒளித் திருநாளுக்கான பொருட்களை வாங்குவதற்காக என்பதை நம்மால் உணர முடிந்தது.
தீபாவளி என்றவுடன்….
தீபாவளி என்றவுடனே, புத்தம்புது துணிகள், இனிப்பு, காரம், பட்டாசு, புதுப்படம் ரீலீஸ் ஆகிய நான்கும்தான் பெரும்பாலோனோருக்கு முதலில் நினைவுக்கு வரும். அதன்பின், உறலினர்கள் சந்திப்பு, ஆசிர்வாதம், பரிசுப் பொருட்கள், நகை வாங்குவது ஆகியவையும் நினைவுக்கு வரும். இந்தமுறை, மேற்கண்ட எதற்கும் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர் தமிழக மக்கள். அதை உறுதிச் செய்யும் வகையில், தீபாவளிக்கு முன், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட அனைத்து கடைவீதிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
அலைமோதும் கூட்டம்:
மழைத் துளிகளைத் தடுக்குமளவுக்கு, மக்கள் தலைகளால், கடைவீதிகள் நிரம்பி காணப்படுகின்றன. புத்தம்புது துணிகளை, தமது நெருங்கிய சொந்தங்களுக்கும், அண்டை உறவினர்களுக்கும் வாங்குவதற்காக, ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் அவரவர் சக்திகேற்ப கடைகளை முற்றுகையிட்டுள்ளனர். ப்ளாட்பார்ம் கடைகள் முதல் குளுகுளு ஏசி கடைகள் வரை அனைத்திலும் மக்கள் கூட்டம். கொரோனாவின் தாக்கத்தால், நிலைகுலைந்து போயிருந்தவர்கள், தற்போது கொரோனாவை வென்ற மகிழ்ச்சியில் வீறுக்கொண்டு வந்துள்ளனர்.
மக்களை மட்டுமல்ல, வியாபார ஸ்தலங்களையும் தலைகீழாக புரட்டிப்போட்டிருந்தது கொரோனா. தற்போது, புதுத்தெம்புடன், உற்சாகமாக, கடைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருவதாக மகிழ்ச்சி பொங்க, ABP நாடு செய்தியாளரிடம் தெரிவித்தார் பிரபல ஆடை நிறுவன தயாரிப்பிடமான டெர்பி ஆடவர் உடை நிறுவனத்தின் தலைமை செயல்நிர்வாகி விஜய் கபூர். புதிய டிசைன்கள், புதிய ஃபேஷன்களுடன் எங்களது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப. இந்த தீபாவளிக்கு பல புது வரவுகள் வந்திருப்பதாகக் கூறும் டெர்பி நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் கபூர், இந்த முறை தீபாவளி, வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, வியாபார நிறுவனங்களுக்கும் மிகச் சிறப்பான தீபாவளியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். டெர்பி நிறுவன உரிமையாளரின் கருத்தை எதிரொலிக்கும் வகையில்தான் அனைத்து வகை துணிக்கடைகளிலும் கூட்டம் அலைமோதுவதை நம்மால் காண முடிந்தது.
கெடுபிடிகளை மீறி விற்பனை அமோகம்:
தீபாவளிக்கும் பட்டாசுக்குமான உறவு பிரிக்க முடியாது. சில நொடிகளில் பல ஆயிரங்கள் கரியாகிறது என்ற முதுமொழி பன்னெடுங்காலமாக பேசப்பட்டாலும், பட்டாசு வாசனையின் முன் அந்த கரி, காணாமல் போய்விடுகிறது என்பதுதான் நிதர்சனம். மாசுப்படுகிறது, 2 மணி நேரம்தான் வெடிக்க வேண்டும், சத்தம் அதிகமாக இருக்கிறது, பசுமை பட்டாசுகளைத் தான் வெடிக்க வேண்டும் என பல கெடுபிடிகள் வந்தாலும், இந்த முறை, கடந்த சில ஆண்டுகளைவிட பட்டாசுகளை, விதவிதமாக பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் அதிகம் இருப்பதாக, சென்னை பட்டாசு வியாபாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஃபரூக், ABP நாடு செய்தியாளரிடம் தெரிவித்தார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, 60-க்கும் மேற்பட்ட பசுமை ரக ஃபேன்சி பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருப்பதாகவும், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க பசுமை பட்டாசுகள் விற்பனை தமிழகமெங்கும் களைக் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தீபாவளியை அலங்கரிக்கும் நகை விற்பனை:
தீபாவளிக்கு நகை விற்பனை என்பது அண்மைக்காலமாக தமிழர்களிடையே அதிகரித்து வருகிறது. தன்த்ரேயாஸ் என வட இந்தியர்கள், தீபாவளியையொட்டி, தங்க நகைகள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பர். தற்போது, தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் மட்டுமல்ல, அனைவருமே, தீபாவளியையொட்டி, தங்கம் வாங்குவது, செல்வத்தை அதிகப்படுத்தும் என்ற நம்ப ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. அதனுடைய எதிரொலி தற்போது நகைக்கடைகளின் விற்பனையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. நகை வியாபாரிகள் சங்கத்தின் முன்னணி நிர்வாகி, ஜெயந்திலால் சலானி, ABP நாடு செய்தியாளரிடம் தெரிவித்தபோது, இந்த முறை தீபாவளி விற்பனை, வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் வரை கூடுதல் விற்பனை ஆகும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். தீபாவளி மட்டும் இல்லாமல், அதைத் தொடர்ந்து திருமண முகூர்த்தங்கள், விசேஷ தினங்கள் வர இருப்பதாலும், நகைக் கடைகளில் இந்தமுறை கூடுதல் விற்பனை இருப்பது நிச்சயம் என உறுதிப்படக் கூறுகிறார் நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் ஜெயந்திலால் சலானி. இந்த தீபாவளி, சில ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து வகை வியாபாரிகளுக்கும் தலை தீபாவளி என்றால் மிகையில்லை என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜெயந்திலால் சலானி.
ஆர்டர் மேல் ஆர்டர் - அசத்தும் இனிப்புக் கடைகள்:
ஸ்வீட்ஸ் இல்லாமல் தீபாவளி இருக்க முடியாது என்பதை அனைவரும் ஏற்பர். அத்தகைய இனிப்புகளை, வீடுகளில் மட்டுமே செய்துவந்த காலம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகிறது என்றால் தவறில்லை. தற்போது பெரும்பாலான வீடுகளில், சம்பிரதாயத்திற்காக சில பொருட்களை வீடுகளில் செய்கின்றனர். மற்றவை, அனைத்தும் கடைகளில் இருந்து வாங்கப்படும் இனிப்புகளும் காரங்களும்தான் அலங்கரிக்கின்றன. அதிலும், அலுவலகங்களில் இனிப்புகள் வழங்கும் பழக்கம் அதிகரித்து இருப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் ஆர்டர் மேல் ஆர்டர் பெற்று விற்பனையை ஜோராக்கி வருகின்றனர். இனிப்புகளிலும் பல வகைகள், பார்ப்பதற்கே, சுவைக் கூட்டுகின்றன. ஆர்வ மிகுதியில் சில கடைகளில், வண்ணப்பூச்சுகளை அதிகமாக்கி, இனிப்புகளை கண்கவர் வண்ணங்களாக மாற்றிவிட, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படி இருந்தாலும், இந்த முறை ஸ்வீட்ஸ் விற்பனை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கும் என நம்பிக்கையாக கூறும் விற்பனையாளர்கள், தீபாவளி முடிந்தவுடன், இனிப்பான தீபாவளி பேட்டி தருகிறோம் என விற்பனை பிஸியில் கூறுகின்றனர்.
60 முதல் 70 சதவீதம் வரை கூடுதல் விற்பனை:
கடந்த 4 நாட்களாக, தமிழகமெங்கும் பல்வேறு கடைகளில் இருந்து வரும் தகவல்களைப் பார்க்கும்போது, இந்த முறை, கடந்த சில ஆண்டுகளைவிட கூடுதல் விற்பனை நடைபெறுகிறது என்பது உறுதி என்கிறார் வணிகர்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா. அதுவும், தற்போதைய விற்பனை தொடரும் பட்சத்தில், இந்த முறை 60 முதல் 70 சதவீதம் கூடுதல் விற்பனை ஆகும் என எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார் வணிகர்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா. இந்த விழாக்காலத்தைப் பயன்படுத்தி, சில இடங்களில், கெடுபிடிகள் என்ற பெயரில் சில அதிகாரிகள் வரம்புகளை மீறுவதால், சிறுவியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை பாதிக்கப்படும் செயல்களும் அரங்கேறி வருவதாகவும் குற்றமும்சாட்டுகிறார் விக்கிரமராஜா. கொரோனாவால் நொறுங்கிப் போயிருந்தவர்கள் மேல் வருவதற்கு ஏற்ப, திட்டமிட்டு வசூலில் இறங்கும் சிலரை, உயர் அதிகாரிகள் தண்டிக்க வேண்டும் என்றும் ABP நாடு செய்தியாளரின் மூலம் கோரிக்கையும் வைத்தார்.
கொரோனாவை வென்ற தீபாவளி:
கடந்த ஒரு வாரமாகவே தீபாவளி விற்பனை களைக் கட்டி வரும் நிலையில், கடைசி நேர விற்பனை எப்போதுமே அதிகமாகத்தான் இருக்கும். மழை தீபாவளி என ஒரு பக்கம் வானிலை அறிவிப்புகள் பயமுறுத்தினாலும், விற்பனையில் எந்தக் குறையும் இருக்காது என்பது போல்தான், மழையிலும் குவியும் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது. தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகம் மட்டுமல்ல உலகத்தை தலைகீழாக புரட்டிப்போட்டது கொரோனா. தற்போது, அதன் தாக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிட்டோம் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் இந்த தீபாவளி, உண்மையிலேயே, அனைத்து தரப்பினரிடமும் ஒரு உத்வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதை கடைவீதிகளிலும், பொது இடங்களிலும் செல்லும் போது உணர முடிந்தது. அந்த வகையில், உற்சாகம், நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் தீபாவளி, அனைவருக்கும் கூடுதலாக தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை