ஸ்பெஸ்ஜெட் vs சேவல் மார்க் - வைரலாகும் பழைய சம்பவம்: மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன?
”ஒயிட் பெட்ரோல் பயன்படுத்தி நேரடியாக ஓசோன் லேயரில் ஓட்டை போடும் விமான சேவை நிறுவனம் சுற்றுச்சூழல் பற்றி பேசலாமா?” என காக் பிராண்டு பட்டாசு நிறுவனம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பரவலால் கலை இழந்து காணப்பட்ட 2020 தீபாவளியை அடுத்து, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். பட்டாசு விற்பனை இன்னும் சூடுபிடிக்காத நிலையில், வெவ்வேறு நிறுவனங்களும், முன்னணி பிராண்டுகளும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, பட்டாசுகளுக்கு ‘பை பை’ சொல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றது. அப்படி ஒரு விளம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பட்டாசு பிராண்டின் ட்வீட்தான் மீண்டும் இப்போது வைரலாகி வருகின்றது.
2019-ம் ஆண்டு, மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், “பட்டாசுகள் அற்ற தீபாவளி, மாசற்ற தீபாவளி” என்ற செய்தியோடு விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்திருந்த பிரபல பட்டாசு கம்பெனி காக் பிராண்டு, “உங்களிடம் மாசற்ற விமானங்கள் இருக்கின்றதா? பெட்ரோல் பயன்படுத்துகிறீர்களா அல்லது க்ரீன் பெட்ரோல் பயன்படுத்துகிறீர்களா? பட்டாசு தொழிலை பற்றி எப்படி உங்களால் இப்படி ஒரு கருத்தை பதிவிட முடிகின்றது. விமான சேவைகளாலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகின்றது. அதனால், உங்களது நிறுவனத்தை பற்றி இப்படி ஒரு பேனர் வைக்கலாமா? ஒயிட் பெட்ரோல் பயன்படுத்தி நேரடியாக ஓசோன் லேயரில் ஓட்டை போடும் நீங்கள் சுற்றுச்சூழல் பற்றி பேசலாமா?” என காட்டமாக கேள்விகளை அடுக்கி பதிவிட்டிருந்தது.
2019-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் விமான நிலைய அதிகாரிகளின் கவனத்தை அடைந்தது. இது குறித்து விசாரிக்கப்பட்டு, மதுரை விமான நிலையத்தில் இருந்த இந்த பேனர் அகற்றப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கடந்தும், இந்த சம்பவம் அடங்கிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பட்டாசுகளை முக்கியமாக கொண்ட தீபாவளி போன்ற பண்டிகைகளால்தான் பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி, பல ஆயிரம் மக்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரம், சுற்றுச்சூழல் மாசு விளைவிக்காத க்ரீன் பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துவிட்டன. இதனால், பட்டாசுகள் இல்லா தீபாவளி என்ற கருத்தை எடுத்து கொள்வதும், எடுத்து கொள்ளாததும் அவரவர் தனி நபர் விருப்பமே.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்