Budget 2024: இன்று தாக்கலாகும் மத்திய பட்ஜெட்..! மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்...!
”மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 முறை தாக்கல் செய்துள்ள சாதனையை முறியடிக்கும் வகையில் மத்திய அமைச்சர நிர்மலா சீதாராமன் தொடரச்சியாக இன்று 7 வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்”
மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த சூழலில் இந்த பட்ஜெட் சாமானி மக்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்ஜெட் சிறப்பானதாக அமைய வேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக வருமான வரி விதிவிலக்கு உச்சவரம்பு சார்ந்து அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைக்க வேண்டும், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை சாமானிய மக்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை பலரும் கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாதம் ஊதியம் பெற்று வரும் தனி நபர்கள், நடுத்தர வர்க்க குடும்பத்தினரை மகிழ்விக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும். அதே போல விவசாயம், சுற்றுலா, சாலை, ரயில் போக்குவரத்து போன்ற உட்கட்டமைப்பு சார்ந்தும் மக்களின் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதே போல தமிழகம் உட்பட பல்வேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இந்த பட்ஜெட் சார்ந்து தங்களது எதிர்பார்ப்பை ஏற்கனவே தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது மொபைல் ரீசார்ஜ் கட்டணம் அதிகரித்துள்ளது மக்கள் மீதான சுமையாக கருதுகின்றனர். எனவே இன்று தாக்கலாகும் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7 வது பட்ஜெட் இதுவாகும். அதோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்த மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ச்சியாகவும், ஒட்டுமொத்தமாக 10 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 முறை தாக்கல் செய்துள்ள சாதனையை முறியடிக்கும் வகையில் மத்திய அமைச்சர நிர்மலா சீதாராமன் தொடரச்சியாக இன்று 7 வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இவர் தொடர்ச்சியாக 5 முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இருந்து மத்திய நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 6வது நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்க வைத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது 2 மணி நேரம் 40 நிமிடம் நிர்மலா சீதாராமன் உரையாற்றிய நிலையில் பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் ஒருவர் மிக நீளமான உரை நிகழ்த்தியது அதுவே முதல்முறை. அதனையும் இந்தாண்டு முறியடிப்பரா அல்லது அதற்கு முன்னதாகவே உரை முடிக்கப்படுமா என்பதும் இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரும்..
.