Agriculture Budget 2024: நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட்! விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? ஓர் அலசல்
Agriculture Budget 2024 Expectations: மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் விவசாய துறைகள் மீதான எதிர்பார்ப்பு என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக கருதப்படுவது விவசாயம். விவசாயத்தை பிரதானமாக கொண்டே நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.
குறைந்த பட்ச ஆதார விலை:
இதனால், ஒவ்வொரு நிதியாண்டிலும் விவசாயத்திற்காக என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கடந்த மோடி அரசுக்கு எதிராக குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர். இது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வட இந்தியாவில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதத்தை பெரும்பாலும் சரிய வைத்தது.
இதனால், நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிப்பது பிரதான எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. விவசாய மூலப்பொருட்கள் விலை குறைப்பு, விவசாயத்திற்கான மானியம் உள்ளிட்டவை முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
நேரடி கொள்முதல்:
தொழில்நுட்ப மற்றும் இணைய வளர்ச்சியின் உதவி ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி தந்துள்ள சூழலில், விவசாயத்திலும் தொழில்நுட்ப மற்றும் இணைய வளர்ச்சியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதலை வலுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இடைத்தரகர் இன்றி சில முக்கியமான விவசாயப் பொருட்களை நேரடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதனால், அதுதொடர்பாக ஏதாவது முக்கியமான அறிவிப்பு வெளியாகுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரிடர் கால இழப்பீடு:
விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், உரப்பொருட்கள் மீதான விலை குறைவாக இருப்பதை உறுதி செய்யவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், நடப்பு நிதிநிலை அறிக்கையில் இதுதொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வெளியாகிறதா? என்றும் விவசாயிகள் எதிர்பாரப்பில் உள்ளனர்.
மிக மிக முக்கியமாக சூறைக்காற்று, வெள்ளம், பெருமழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் காரணங்களால் பயிர்கள் சேதம் அடைவதை தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இயற்கை பேரிடர்களால் பயிர்கள் சேதம் அடைந்தால் போதிய அளவு இழப்பீடு வழங்கும் வகையிலும் நிதி ஒதுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான அறிவிப்பும் வெளியாகும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருத்தி விவசாயம்:
பருத்தி விவசாயம் மிகவும் முக்கியத்துவமான விவசாயமாக உள்ளது. ஏனென்றால் டெக்ஸ்டைல் துறையில் பருத்தி நூலின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். இதனால், பருத்தி விவசாயத்தை அதிகரிக்கும் விதத்தில் அதற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல மாநிலங்களில் போதிய அளவு கொள்முதல் மையங்கள் இல்லை என்ற குற்றசசாட்டும் தொடர்ந்து விவசாயிகளால் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால், கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும், தற்போது வரை பல அரசு குடோன்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மழை மற்றும் வெயில் காலங்களில் வீணாகி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதை நிவர்த்தி செய்யும் விதமாக உணவுப்பொருட்கள் வீணாவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் ஏற்படுவதற்கு அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
சிறு, குறு பயிர்கள்:
பிரதான பயிர்களாக உள்ள நெல், கோதுமை, கரும்பு தவிர பிற சிறு, குறு பயிர்கள் விவசாயத்திற்கான வளர்ச்சிக்கு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகுமா? என்றும், நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள தேயிலை விவசாயத்திற்கும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்றும் எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதவிர, விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள், விவசாயத்திற்கான மானியம், விவசாய மின்கட்டணம், விவசாய கூலிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றை வளமாக்கும் அறிவிப்புகள் நாளை வெளியாகுமா? என்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.