Fake 500 Currencies : பெருகிப்போன கள்ளநோட்டு கும்பல் ! - புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க RBI முடிவு ?
ஏற்கனவே கள்ள நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.
புதிய ரூபாய் நோட்டு:
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கலர் கலராக 100,200, 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் , கள்ள நோட்டு புழக்கத்தை அடியோடு அகற்றுவதற்காகவும்தான் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் 500 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படலாம் என்னும் செய்திகள் வெளியாகின.
கள்ளநோட்டு:
என்னதான் புதிய ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தாலும் , அதில் எத்தனை மாற்றங்களை செய்தாலும் அதனையும் அச்சு அசலாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்தான் உள்ளது . இதற்காக அவர்கள் சர்வதேச உதவியை நாடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக போலி 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே கள்ள நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. இந்த சூழலில்தான் சில நவீன வசதிகளுடன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகலாம் என தெரிகிறது.
பெருகிப்போன கள்ளநோட்டு சந்தை :
2021 - 2022-ஆம் நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டின் தொடக்கமே முந்தைய ரெக்கார்டை பீட் செய்துள்ளது.
இந்த நிதியாண்டில் இதுவரையில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது பொருளாதர அளவில் மிகப்பெரிய நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய தரத்தில் 500 ரூபாய் :
இதற்காக ரிசர்வ் வங்கி அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் காகிதம் மற்றும் மை இரண்டிலும் தர உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் அச்சு அசலாக போலி 500 ரூபாய் நோட்டுகளை மர்ம கும்பலால் உருவாக்க முடியாதாம்.
100, 200 ரூபாயிலும் மாற்றங்கள் :
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளிலும் சில நவீன வசதிகளை ரிசர்வ் வங்கி புகுத்தவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் நிறம் மாறாத மை, காகிதத்தில் தரம் , மூன்று வகையான பாதுகாப்பு இழைகள், நோட்டுகளில் சில குறிப்பிட்ட இடங்களில் ரகசிய மைக்ரோ துளைகள் , மையால் உருவாக்கப்படும் குறியீடுகள் , ரசாயன குறிப்புகள் ,ஃபாயில் பேட்ச் போன்றவை இடம்பெறும் என தெரிகிறது.